மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான ஒருநாள் சர்வதேச போட்டி தொடரை கைப்பற்றிய இலங்கை
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்ற இலங்கை, பல்லேகலவில் நேற்று (23) நடைபெற்ற இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியது.
மழை காரணமாக இனிங்ஸொன்றுக்கு 44 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் சரித் அசலங்க தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், மகேஷ் தீக்ஷன (3), அசித பெர்ணாண்டோ (2), வனிது ஹசரங்கவிடம் (3) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து ஒரு கட்டத்தில் 15.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 58 ஓட்டங்களையே பெற்றுத் தடுமாறியது.
பின்னர் ஷெர்ஃபேன் ருதஃபோர்ட்டின் 80 (82), குடகேஷ் மோட்டியின் ஆட்டமிழக்காத 50 (61) ஓட்டங்களுடன் 36 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது. இறுதி 2 விக்கெட்டுகளையும் அசித, ஹசரங்க ஆகியோர் கைப்பற்றினர்.
பதிலுக்கு 190 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆரம்பத்திலேயே அல்ஸாரி ஜோசப், மோட்டியிடம் அவிஷ்க பெர்ணாண்டோ, குசல் மென்டிஸை இழந்தது. பின்னர் குறிப்பிட்ட நேரத்தின் பின் ஜோசப்பிடம் நிஷான் மதுஷ்க 38 (44) வீழ்ந்தார். சிறிது நேரத்தில் றொஸ்டன் சேஸிடம் சதீர சமரவிக்கிரம 38 (50) ஓட்டங்களுடன் வீழ்ந்தார்.
இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் ஜனித் லியனகே 24 (34) ரண் அவுட்டானபோதும் அணித்தலைவர் சரித் அசலங்கவின் ஆட்டமிழக்காத 62 (61), கமிந்து மென்டிஸின் ஆட்டமிழக்காத 11 (16) ஓட்டங்களோடு 38.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை இலங்கை அடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக தீக்ஷன தெரிவானார்.தொடரைக் கைப்பற்றிய இலங்கை