பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்தும் சிரமதானப் பணியை நவம்பர் 14 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு தயாராகுங்கள்
‘ அரசியல்வாதிகளுக்குரிய வீண் செலவீனங்களை குறைக்கும் கொள்கையை கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை செயல்படுத்திவருகின்றோம். இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல.” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நேற்று (03) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர், “புதியதொரு அரசியல் கலாசார பாதையில் நாம் பயணிக்க வேண்டியுள்ளது. அதற்கு நிறைவேற்று அதிகாரம் மட்டும் பலமாக இருந்தால் போதாது, அமைச்சரவை, பாராளுமன்றமும் பலமானதாக இருக்க வேண்டும்.
எனவே, புதிய பாராளுமன்றத்தை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களால் நிரப்புங்கள். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை நோக்கி செல்ல முடியும்.
புதிய ஆட்சியில் 25 பேர்கொண்ட அமைச்சரவையே நியமிக்கப்படும். அதற்கு இணையாக பிரதி அமைச்சுகள் உருவாக்கப்படும். தற்போதைய பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்தும் சிரமதானப் பணியை நவம்பர் 14 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு தயாராகுங்கள்.
ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என அரசியல்வாதிகளின் வீண் செலவுகள் குறைக்கப்பட்டு, மக்கள் பணம் சேமிக்கப்படும். இது கொள்கை ரீதியிலான முடிவு. முன்னாள் ஜனாதிபதிகளை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல.
வீடுகளை வழங்க நேரிடும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சமைப்பதற்கு சமையல்காரர்கள் வழங்கப்படமாட்டார்கள், தேவைக்கு அதிகமான வாகங்கள் வழங்கப்படாது.” என தெரிவித்துள்ளார்.