மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-1)
திருப்பாவை
பாடல்:
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்;
நீராடும் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
மார்கழி மாதம்.. நிலவு பூரணமாக பிரகாசிக்கின்ற நல்ல நாள் இது. அழகிய ஆபரணங்களை அணிந்த செல்லச் சிறுமிகளே, நீராடப் போகலாம் வாருங்கள். கூர்மையான வேலை ஏந்திப் போர்புரியும் நந்தகோபனின் மகனும், கண்ணனுடைய விளையாட்டுகளை அருகில் இருந்து காணும் பேறு பெற்ற அழகிய கண்களைக் கொண்ட யசோதையின் இளஞ்சிங்கம் போன்றவனும், மேகத்தின் நீல நிறம் கொண்டவனும், ஒளி மிகுந்த சந்திரன் போன்ற முகம் கொண்டும் விளங்கும் நாராயணன், இந்த பாவை நோன்பை நோற்றால், நமக்கு பறை வாத்தியத்தைத் தருவான். நோன்பு வெற்றி பெற்றால் ஊரும். நாடும் நலம்பெறும். உலகத்தவர் நம்மை புகழ்வார்கள், வாருங்கள்.
திருவெம்பாவை
பாடல்
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை
யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே! வளருதியோ? வன்செவியோ நின்செவிதான்?
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய
வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டதுமே விம்மி விம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்கன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே! என்னே!’
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
வாள் போல ஒளி வீசும் கண்களையுடைய பெண்ணே.. முதலும் முடிவும் இல்லாத சோதி சொரூபமாய் நின்ற சிவபெருமானைப் போற்றி, நாங்கள் பாடுவதைக் கேட்டபின்னும் நீ உறங்கிக் கொண்டிருக்கிறாயே! உன் காதுகள் அவ்வளவு உணர்ச்சியற்றுப் போய்விட்டதா? அந்த மகாதேவனின் பாதக் கமலங்களைப் போற்றி நாங்கள் பாடியதை வீதியில் கேட்டதுமே, ஒருத்தி பூக்கள் தூவிய படுக்கையில் இருந்து புரண்டு எழுந்தாள். நீயோ எந்த அசைவும் இன்றி படுத்துக் கிடக்கிறாயே! எமது கண்ணின் பாவை போன்ற பெண்ணே! இது என்ன அதிசயம்?