கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழப்பு !
கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
‘கிளிநொச்சியின் முழங்காவில் மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.
எலிக்காய்ச்சல் நோய்க்காரணி Leptospirosis பக்டீரியாவாக இருக்கலாம்
கால்நடைகளின் சிறுநீருடன் நீர் கலந்திருக்கும் பகுதிகளில் மனிதர்கள் நடமாடும் போது தோலில் ஏற்பட்டுள்ள வெடிப்புகள் அல்லது காயங்கள் ஊடாக குறித்த கிருமி பரவுவதற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இதன் அறிகுறிகளாக கடுமையான காய்ச்சல், தலைவலி, கண் சிவப்பாக இருத்தல், உடல் நோவு, தசை நோவு, வயிற்று நோவு, இருமல், மூச்சு எடுத்தலில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
எனவே காய்ச்சல் ஏற்பட்டாலும் இவ்வாறான அறிகுறிகள் காணப்பட்டாலும் உடனடியாக வைத்திய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
இதைவிட தற்போதைய பனியுடனான காலநிலையில் சளி அதிகரித்து நிமோனியா போன்ற காய்ச்சலும் ஏற்பட வாய்ப்புண்டு அதனைவிட மழையுடனான காலநிலையைத் தொடர்ந்து டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்துள்ளது.
இதிலும் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும்’ என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார்.