ஹெல்மட் அணியவில்லை என சாலையில் நடந்து சென்றவருக்கு அபராதம் விதித்த பொலிஸ்
மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் நடந்து சென்றபோது ஹெல்மெட் அணியாததற்காக ஒருவருக்கு 300ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பன்னாவில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஜய்கர் காவல் நிலையப் பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சுஷில் குமார் சுக்லா, தனது மகளின் பிறந்தநாள் விழாவிற்கு விருந்தினர்களை அழைக்க ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒரு பொலிஸ் வாகனம் அவரை நிறுத்தியுள்ளது.
சுக்லா, தான் வலுக்கட்டாயமாக பொலிஸ் வாகனத்தில் ஏற்றி அஜய்கர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் சிறிது நேரம் தடுத்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்
தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வீடு திரும்ப வேண்டும் என்று அவர் விளக்கியபோது, அதிகாரிகள் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை எழுதி ஹெல்மெட் அணியவில்லை என அவருக்கு அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான சுக்லா, பன்னாவுக்குச் சென்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்பியிடம் புகார் அளித்தார்.
புகாருக்கு பதிலளித்த எஸ்பி விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.