இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை 50 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு!
எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை 50 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே இதனைத் தெரிவித்துள்ளார்.
சுமார் 5 ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் இறக்குமதியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் மீள ஆரம்பிக்கும்போது விதிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கான வரி விகிதங்களை அரசாங்கம் விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.
நிதி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வரி வீதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த வரி வீதங்களின்படி, இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை வெட் வரி அல்லாமல் எதிர்காலத்தில் சுமார் 20 சதவீதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மேற்படாமலுள்ள வாகனங்களுக்கு 200 சதவீதம் மற்றும் 300 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
சில வாகன வகைகளுக்கு அவற்றின் இயந்திர திறன் மற்றும் கிலோவாட்களில் அளவிடப்படும் மோட்டார் சக்தியை அடிப்படையாகக் கொண்டு வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி விதிக்கப்பட்டதன் மூலம், வெற் வரி அல்லாமல் பல வாகனங்களுக்கான வரிகள் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்காலத்தில் வாகன விலைகளும் சுமார் 20 சதவீதம் அதிகரிக்கக்கூடும். 660 சிசி இயந்திர வலு கொண்ட வாகனங்களுக்கான முந்தைய வரி சுமார் 16 இலட்சம் ரூபாவாக இருந்ததுடன், புதிய வரி சதவீதத்தின்படி, அந்த வரி சுமார் 18 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கும்.
ஆயிரம் சிசி இயந்திர வலு கொண்ட வாகனங்களுக்கு ஏற்கனவே வரி சுமார் 20 இலட்சம் ரூபாவாக இருந்தது.
எனினும், புதிய வரி சதவீதத்தின்படி, அந்த வாகனங்களுக்கு சுமார் 24 இலட்சம் ரூபாய் வரியாக விதிக்கப்படவுள்ளது.
அத்துடன், புதிய வரி வீதத்தை சீர்செய்ததன் பின்னர் ஆயிரத்து 500 சிசி இயந்திர வலு கொண்ட வாகனங்களுக்கான வரி சுமார் 57 இலட்சம் ரூபாவிலிருந்து 66 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கவுள்ளது.
அதன்படி, எதிர்காலத்தில், வெட் வரி போன்ற வரிகள் சேர்க்கப்படுவதால், வாகனங்களுக்கான விலை சுமார் 50 முதல் 60 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்.