காசாவில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல் : குழந்தைகளிடையே பரவும் தோல் நோய்

காசாவில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல் : குழந்தைகளிடையே பரவும் தோல் நோய்

தெற்கு காசாவின் கான் யூனிஸ் மற்றும் ரபா நகரங்களில் இஸ்ரேலின் புதிய வெளியேற்ற உத்தரவினால் 250,000 பலஸ்தீனர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் காசாவுக்கான ஐ.நா. மனிதாபிமான இணைப்பகம் முற்றுகையில் உள்ள அந்தப் பகுதியின் மக்கள் தொகையில் 80 வீதமான 1.9 மில்லியன் மக்கள் தற்போது இடம்பெயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளது.

கான் யூனிஸ் நகரில் இருந்து இஸ்ரேலை நோக்கி பலஸ்தீன போராளிகள் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து அந்த நகரில் இஸ்ரேல் கடந்த திங்களன்று வெளியேற்ற உத்தரவை பிறப்பித்திருந்தது.

இதனால் இஸ்ரேலின் குண்டுவீச்சுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர்.

எனினும் இஸ்ரேல் பாதுகாப்பான வலயம் என்று கூறிப்பிட்ட மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வில் தொடர்மாடிக் கட்டடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தின் ஒன்பது பேர் உட்பட குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

‘காசாவில் உள்ள பலஸ்தீனிய மக்கள் துன்பப் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளனர்.

அவர்களது வீட்டு வாழ்வு சிதைக்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கை நிலைகுலைந்துள்ளது’ என்று காசாவுக்கான ஐ.நா. இணைப்பாளர் சிக்ரிட் காக் பாதுகாப்புச் சபையில் நேற்று முன்தினம் (02) குறிப்பிட்டார்.

‘ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அடைக்கலம் மற்றும் பாதுகாப்புத் தேடி மீண்டும் ஒருமுறை இடம்பெயர்ந்திருப்பதோடு, காசாவெங்கும் தற்போதும் 1.9 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

கான் யூனிஸ் பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் புதிய உத்தரவு பெரும் கவலை அளிப்பதாக உள்ளது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக இடம்பெறும் காசா போரில் இஸ்ரேல் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் படை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் கான் யூனிஸில் நேற்று முன்தினம் இரவும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரிலும் இஸ்ரேலின் படை நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன.

ரபாவின் தால் அல் சுல்தான் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இங்கு இடிபாடுகளில் இருந்து ஏழு சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ரபா நகரின் மத்திய பகுதியில் உள்ள இரு இடங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இதன் போது பல பகுதிகளையும் கைப்பற்றிய டாங்கிகள் நகரில் அண்மைய நாட்களாக மேலும் மேற்கு மற்றும் வடக்கு பக்கமாக முன்னேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காசா நகரின் சுஜையா பகுதியில் இஸ்ரேலிய படை கடந்த ஒரு
வாரமாக படை நடவடிக்கையை முன்னெடுத்த நிலையில் அங்கிருந்து வெளியேறிய மக்கள் தமது வீடுகளுக்கு திரும்ப முயன்ற நிலையில் போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டு மேலும் 17 பேர் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று மத்திய காசாவின் மகாசி அகதி முகாமில் கார் ஒன்றை
இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் மூவர் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இதுவரை இடம்பெற்ற தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 38 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இதேவேளை காசாவில் இஸ்ரேல் போரை ஆரம்பித்தது தொடக்கம் தமது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு மோசமான நிலையில் வாழும் 150,000க்கும் அதிகமான மக்களிடையே தோல் நோய் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு
குறிப்பிட்டுள்ளது.

இதில் குறிப்பாக சிரங்கு மற்றும் சின்னம்மை பாதிப்பு அதிகரித்திருப்பதாக மருந்தாளர் ஒருவரான சமிஹமித் குறிப்பிட்டுள்ளார்.

டெயிர் அல் பலாஹ் அகதி முகாமில் இடம்பெயர்ந்த மக்களுக்காக அவர் தற்காலிக சிகிச்சை மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.

தற்காலிக அடைக்கலமாக உள்ள பாடசாலை ஒன்றுக்கு அண்மையில் சென்றபோது அங்கு 150 மாணவர்களில் 24 பேருக்கும் சிரங்கு நோய் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஊட்டச்சத்து குறைபாட்டால் காசாவில் உள்ள குழந்தைகள் இடையே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும் நிலையில் அவர்கள் நோய்களால் பாதிக்கப்படும் நிலை தீவிரம் அடைந்திருப்பதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்புக்கான காசாவில் உள்ள
இணைப்பாளர் முஹமது அபூமகைசீப் குறிப்பிட்டுள்ளார்.

இடம் பெயர்ந்த மக்கள் சரியான வீடுகளில் வசிக்காததாலும், சுகாதாரமின்மையாலும் அவர்கள் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

காசாவில் நிலவும் வெப்பமான காலநிலை வியர்வை மற்றும் அழுக்குகள் குவிவதை அதிகரித்திருப்பதோடு அது சொறி மற்றும் ஒவ்வாமைக்கு காரணமாகிறது மற்றும் தொற்று நோய்க்கும் வழிவகுப்பதாக அவர் கூறினார்.

கான் யூனிஸில் இருந்த புதிதாக இடம்பெயர்ந்த மக்களுக்கு போதுமான தற்காலிக முகாம்கள் இல்லாத நிலையில் அவர்கள் வீதிகளில் உறங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் நகரின் கிழக்கு பக்கமாக அடைக்கலம் பெற்றுள்ளனர்.

கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இடம்
பெற்ற போர் நிறுத்த முயற்சியும் எந்த முன்னேற்றமும் இன்றி ஸ்தம்பித்துள்ளது.

இதில் அமெரிக்க நிர்வாகம் இஸ்ரேலின் சில போர் நடவடிக்கைகளுக்கு கவலையை வெளியிட்டபோதும் அது இஸ்ரேலுக்கு தொடர்ந்தும் உறுதியான ஆதரவை வழங்கி வருகிறது.

பலஸ்தீனர்களின் கொலைகளுக்கு உடந்தையாக இருப்பதாகக் குறிப்பிட்டு அமெரிக்க நிர்வாகத்தில் இருந்து மேலும் 12 அதிகாரிகள் வெளிப்படையாக இராஜினாமா செய்துள்ளனர்.

‘காசாவில் முற்றுகையில் உள்ள பலஸ்தீன மக்கள் மீதான கொலை மற்றும் வலுக்கட்டாயமான பட்டியில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு தொடர்ச்சியான ஆயுத விநியோகம் மற்றும் ஒத்துழைப்பை வழங்கி வருகிறது’ என்று இந்த அதிகாரிகள் கூட்டாக வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )