படகு விபத்தில் 40 பாகிஸ்தானியர்கள் பலி!

படகு விபத்தில் 40 பாகிஸ்தானியர்கள் பலி!

மேற்கு ஆப்பிரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரையில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 40 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் ஐரோப்பாவில் குடியேறும் நோக்கிலேயே படகில் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐரோப்பாவில் குடியேறும் நோக்கில் மோரிடானியாவில் இருந்து படகு மூலம் 65 பாகிஸ்தானியர்கள் உள்பட 80 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் சென்ற படகு மொராக்கோவின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுக நகரமான டக்லா அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதில் 40 பாகிஸ்தானியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்துவிட்டதாக ஸ்பெயினை தளமாகக் கொண்ட புலம்பெயர்ந்தோர் உரிமைகள் குழுவான ‘வோக்கிங் வோர்டர்ஸ்’ (walking boarders) தெரிவித்துள்ளது.

இதையடுத்து, படகு கவிழ்ந்து உயிரிழந்த பாகிஸ்தானியர்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

படகில் இருந்த அனைத்துப் பாகிஸ்தானியர்களும், கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், உயிர் பிழைத்தவர்களில் சிலர் தங்கள் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

6 பேர் கொண்ட விசாரணைக் குழு மொராக்கோவுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொராக்கோ தலைநகர் ரபாத் மற்றும் டக்லாவுக்கு அதிகாரிகள் சென்று, நிலைமையை மதிப்பிட்டு விரிவான அறிக்கையை பிரதமரிடம் வழங்குவார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )