தேவைப்பட்டால் மீண்டும் போரை தொடங்குவோம்

தேவைப்பட்டால் மீண்டும் போரை தொடங்குவோம்

ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழித்து ஒழிப்பதாக கூறி இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது.

இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடுமையான மோதல் தொடர்ந்தது.

போர் காரணமாக இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஒருபக்கம் ஏற்பட்ட நிலையில், மறுப்பக்கம் அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதாக சர்வதேச அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகள் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வந்தன.

இந்நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் பணிகளில் அமெரிக்கா மற்றும் கத்தார் ஈடுபட்டன.

அமெரிக்கா மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக நடைபெற்றது. இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்கா மற்றும் கத்தார் கடந்த புதன்கிழமை அறிவித்தது.

அந்த வகையில் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று (19) காலை அமலுக்கு வருகிறது. இஸ்ரேல் நேரப்படி இன்னும் சில மணி நேரங்களில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விதிமீறல் இருந்தால், அதை இஸ்ரேல் சகித்துக் கொள்ளாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஒப்புக்கொண்டபடி விடுவிக்கப்படும் பணயக்கைதிகளின் பட்டியலை பெறும் வரை நாங்கள் கட்டமைப்பை நோக்கி முன்னேற முடியாது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விதிமீறல்களை இஸ்ரேல் பொறுத்துக்கொள்ளாது. ஹமாஸ் மட்டுமே பொறுப்பு. தேவைப்பட்டால் அமெரிக்காவின் ஆதரவோடு போரை மீண்டும் துவங்க எங்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )