தை மாதத்தின் சிறப்புகள்
‘தை’ மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள் நம்பிக்கை மற்றும் நேர்மறையான அணுகுமுறையை ஊக்குவிக்கின்றன. தை பொங்கல் என்பது சூரியனுக்கு நன்றி செலுத்தும் ஒரு பண்டிகை, மேலும் காணும் பொங்கல் என்பது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் ஒரு நாள்.
பஞ்சம் தீர்க்கும் தை மாதம்
விளைச்சல் முடிந்து அறுவடை நடந்து பயிர்கள் அனைத்தும் வீடு சேரும் மாதமே தை ஆகும். தை முதல் நாள் சூரியனுக்கு படைப்பார்கள். இக்காலகட்டத்தில் தான் தானியப் பயிர்களில் முக்கியமாக நம் தமிழர்களின் அன்றாட உணவான நெல்லானது அதிக அளவிலும், சற்று விலை குறைவாகவும் கிடைக்கிறது. பெரும்பாலும் ஒரு வருடத்திற்கு தேவையான நெல்லை மக்கள் வாங்கி பத்திரப்படுத்தி கொள்வர். வீட்டில் உணவிற்குப் பஞ்சமின்றி மகிழ்வுடன் இருக்க வழி பிறக்கும் காலம்.
உத்தராயண புண்ணிய காலம்
உத்தராயணம் என்பது வடமொழிச் சொல்லாகும். வடமொழியில் உத்தர் என்றால் வடக்கு என்றும், அயனம் என்றால் வழி என்றும் பொருள். நம் கண்களுக்கு புலப்படும் ஒரே இறை சக்தியாக விளங்குபவர் சூரியன் பகவான் மட்டுமே.
சூரிய பகவான் தனது பயணத்தை தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் காலமே உத்தராயணம் ஆகும். தை மாதத்தில் சூரியன் ராசி மண்டலத்தில் மகர ராசியில் நுழைந்து 29 நாட்கள், 27 நிமிடங்கள், 16 வினாடிகள் வரை பயணிப்பார்.
தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் ஆறு மாதத்திற்கு உத்தராயணம் நீடிக்கும். இக்காலமானது ஞானத்தை வழங்கும் காலமாக கருதப்படுகிறது. இதுவே தேவர்களின் காலைப் பொழுது என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது.
சக்தி வேல் பெற்ற நாள்
தை பூச நாளில் தான் அன்னை பார்வதி தேவி, அசுரர்களை அழிப்பதற்காக ஆறுமுகக் கடவுளுக்கு சக்தி வேலை வழங்கிய நாள். அதனால் தான், தைபூச திருநாள் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நீத்தார் கடன் நீக்கும் நாள்
தை மாதத்தில் வரும் தை அமாவாசை மற்றொரு முக்கிய நாளாக கருதப்படுகிறது. அன்று தான் முன்னோர்களுக்கு தர்ப்பணம் எனப்படும் நீத்தார் கடன் வழிபாட்டை மோற்கொள்ளும் நாள். ஆறு, குளம், கடல் என அனைத்து நீர்நிலைகளிலும் பித்ரு கடன் வழிபாடு மேற்கொள்ளப்படும்.
ரத சப்தமி விரதம்
தை மாத வளர்பிறையில் வரும் சப்தமி திதியானது ரதசப்தமியாக இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. அன்றைக்கு தான் சூரியன் தன்னுடைய வடதிசை பயணத்தை தொடங்குகிறார். ரத சப்தமி நாளில் விரதம் மேற்கொள்வோருக்கு தேக ஆரோக்கியம், நோய் இல்லாமை, நோய் இல்லாமை, புத்திரப்பேறு, நிலையான செல்வம், பகைவர்களையும் வெல்லும் சக்தி, வெற்றி, நிலம், தானியம் மற்றும் புண்ணியம் ஆகியவை கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை
பாவங்கள் போக்கும் சபலா ஏகாதசி
தை மாத தேய்பிறையில் வரும் ஏகாதசி சபலா ஏகாதசி என அழைக்கப்படுகிறது. இந்நாளில் உண்ணாமல் உறங்காமல் விரதமிருந்து மஹாவிஷ்ணுவை வழிபட்டால் நாம் முன்பு செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். அன்றைய நாளில், ஏழைகளுக்கு பழங்களை தானம் செய்வதால், ஒளிமயமான வாழ்க்கை அமையும். லும்பகன் என்னும் இளவரசன் இவ்விரதத்தை கடைபிடித்து பாவங்கள் அனைத்தும் நீங்கி அரச பதவியையும், பின்னர் வைகுண்ட பதவியையும் பெற்றான் என்பது ஐதீகம்.
வளர்பிறை புத்ரதா ஏகாதசி
தை மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியானது, புத்ரதா ஏகாதசி என்றும் சந்தான ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் ஏகாதசி விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். சுகேது மான் என்ற மன்னன் புத்திர பாக்கியம் இல்லாத குறையை, புத்ரதா ஏகாதசி விரதமிருந்து நல்ல மகனை பெற்றான். அதோடு தன் நாட்டு மக்களையும் இந்த புத்ரதா ஏகாதசி விரதத்தை பின்பற்றச் செய்தான்.
சாவித்ரி கவுரி விரதம்
தை மாத இரண்டாம் நாளில் பின்பற்றப்படும் விரம் சாவித்ரி கௌரி விரதமாகும். சிரஞ்சீவியான மார்க்கண்டேயர் இந்த விரதத்தை தருமனுக்கு எடுத்துக் கூறியதை அடுத்து தருமரும் இந்த விரதத்தை மேற்கொண்டார். இவ்விரதத்தை மேற்கொள்வோர், அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடி, களிமண்ணால் செய்த சாவித்ரி அம்மனை பூஜை செய்ய வேண்டும்.
பைரவர் வழிபாடு
தை மாதத்தில் வரும் முதல் செவ்வாய் கிழமையில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகிறது. தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு உகந்ததாக கூறப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப்பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. சனி தோஷம் முழுமையாக அகல கால பைரவருக்கு விரதம் இருப்பது விசேஷம்.