உன்னிச்சை குளத்தின் 3 வான்கதவுகள் திறப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்ப்பாசன குளமான உன்னிச்சை குளத்தின் 3வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
10 அடிவரை நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மக்கள் வாழும் பகுதிகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளது.
பெருமழை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொழும்பு – மட்டக்களப்பு வீதி, கல்முனை – மட்டக்களப்பு வீதி உட்பட பிரதான பாதைகளில் வெள்ளம் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பொலன்னறுவை வீதிகளிலும் மன்னம்பட்டி ஊடாக நீர்தேங்கி நிற்பதால் மட்டக்களப்பு பொலன்னறுவை போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் அடைமழை பெய்து வருகிறது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்களும் தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக மட்டக்களப்பு காத்தான்குடி, ஆரையம்பதி, வெல்லாவளி, கொக்கட்டிச்சோலை, வாகரை, வாழைச்சேனை, செங்கலடி, ஏறாவூர் நகரம், ஓட்டமாவடி, கிரான் உட்பட பல பிரதேச செயலகப் பிரிவுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.