லாமின் யமால், நிக்கோ வில்லியம்ஸ்: புலம்பெயர் சிறுவர்கள் ஸ்பானிய கால்பந்து சூப்பர் ஸ்டார்கள் ஆனது கதை

லாமின் யமால், நிக்கோ வில்லியம்ஸ்: புலம்பெயர் சிறுவர்கள் ஸ்பானிய கால்பந்து சூப்பர் ஸ்டார்கள் ஆனது கதை

நிக்கோ வில்லியம்ஸ் மற்றும் லாமின் யமால் ஆகியோர் ஸ்பானிஷ் கால்பந்து அணியின் அனைவருக்கும் பிடித்தமான இரண்டு சகோதரர்கள்.

நிக்கோ வில்லியம்ஸுக்கு வயது 22, லாமின் யமாலுக்கு 17. இருவரும் புலம்பெயர்ந்து குடியேறிய ஆப்பிரிக்கக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். தற்போது ஸ்பெயினின் கால்பந்து சூப்பர் ஸ்டார்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) இங்கிலாந்தில் நடைபெறும் யூரோ 2024 சாம்பியன்ஷிப் போட்டியின் போது ​​பலரின் கண்கள் இவர்கள் மீது தான் இருக்கும்.

இரண்டு இளம் வீரர்களும் சிறப்பாக விளையாடி, ஜார்ஜியாவிற்கு எதிரான காலிறுதிப் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர். அதன் பின்னர் அரையிறுதியில் பிரான்ஸுக்கு எதிரான போட்டியில், 2-1 கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் லாமின் வரலாற்றுக் கோல் அடித்து, ஐரோப்பிய சாம்பியன்ஷிப் ஆட்டத்தில் கோல் அடித்த இளம் வீரர் என்னும் பெருமையை தன்வசப்படுத்தினார்.

நான்காவது கான்டினென்டல் சாம்பியன்ஷிப்பிற்காகக் களமிறங்கும் ஸ்பெயின் அணியில் சமீபத்திய வெற்றிகளுக்கு நிக்கோ மற்றும் யமாலின் ஒன்றிணைந்த ஆட்டம் தான் முக்கியக் காரணம்.

ஃபுட்பால் மைதானத்துக்கு வெளியேயும் லாமின் யமால், நிக்கோ வில்லியம்ஸ் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சேர்ந்து டிக்டாக் பொழுதுபோக்குச் செயலியில் பல்வேறு வேடிக்கையான டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அவர்களின் உறவு உன்னதமானது. சமீபத்திய ஆண்டுகளில் இடம்பெயர்வுகளைக் கண்ட தேசத்தின் பெருமை மிக்கச் சின்னங்களாக பார்க்கப்படுகிறார்கள்.

“அவர்கள் ஸ்பெயினுக்கு பெருமை சேர்க்கிறார்கள், அவர்கள் இருவரும் புதிய ஸ்பெயினின் ஊக்கம் தரும் முன்னுதாரணமாக உள்ளனர்,” என்று ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் தகவல்தொடர்பு நிபுணரான பேராசிரியர் மொய்ஸஸ் ரூயிஸ் பிபிசி முண்டோ சேவையிடம் கூறினார்.

“நிக்கோ வில்லியம்ஸ் மற்றும் லாமின் யமால் ஆகியோர் இளம் ஸ்பானியர்கள். அதே சமயம் சவாலான மற்றும் கடின உழைப்பு கொண்ட குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். பணிவு மற்றும் திறமையின் இரண்டு உதாரணங்கள்,” என்று பாராட்டுகிறார் ரூயிஸ்.

ஆனால் இந்த வீரர்களின் கதை தான் என்ன, அவர்கள் எப்படி ‘சூப்பர் ஸ்டார்’ ஆனார்கள்?

வாழ்க்கைப் பயணம்

நிக்கோ மற்றும் அவரது மூத்த சகோதரர் இனாக்கி வில்லியம்ஸ் ஸ்பெயினில் பிறந்து வளர்ந்தவர்கள். இனாக்கி வில்லியம்ஸ் ‘அத்லெடிக் பில்பாவோ’ அணியின் கால்பந்து வீரர் ஆவார்.

அவரது வாழ்க்கைப் பயணம் நம்பிக்கை, இடம்பெயர்வு, துன்பம், கடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் ஒற்றுமை பற்றிப் பேசுகிறது.

நிக்கோ மற்றும் இனாக்கியின் பெற்றோர்களான மரியா மற்றும் ஃபெலிக்ஸ், 1994-இல் ஐரோப்பாவில் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காகத் தம் ஆப்பிரிக்க நாடான கானாவை விட்டு வெளியேறினர். அந்த சமயத்தில் மரியா இனாக்கியை வயிற்றில் சுமந்து கர்ப்பமாக இருந்தார்.

இந்தப் பயணத்தின்போது பெரும்பாலான நாட்கள் நடக்க வேண்டியிருந்தது. சஹாரா பாலைவனம் உட்பட பல்வேறு பகுதிகளை நடைப்பயணமாகக் கடக்க வேண்டியிருந்தது.

அவர்கள் எல்லை வேலியைத் தாண்டிக் குதித்து ஸ்பானியப் பிரதேசமான மெலிலாவுக்குச் சென்றடைந்தனர்.

இந்தப் பயணத்தைப் பற்றி இனாக்கி ஸ்பானிஷ் ஊடகங்களில் பகிர்ந்த போது, தனது தாயார் ‘வெறுங்காலுடன்’ பயணித்ததாகக் கூறினார்.

இனாக்கியின் பெயருக்கு பின்னால் இருந்த மனிதர்

“போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து தப்பி வந்ததாகச் சொல்லும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் அவர்கள் லைபீரியாவிலிருந்து வந்ததாகக் கூறினார்கள். பல ஆண்டுகளாக, அவர்கள் அங்கிருந்து தான் வந்தார்கள் என்று நினைத்தேன். அந்தச் சமயத்தில், நான் ஒரு கிளாரேஷியன் மாணவனாக இருந்தேன் (கத்தோலிக்க மிஷனரி) மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான காரிடாஸ் பராமரிப்பு குழுவில் இருந்தேன்,” என்று இனாக்கி மார்டோன்ஸ் அஜா பிபிசி முண்டோவிடம் கூறுகிறார்.

முன்பு பாதிரியாராக இருந்தவர் இனாக்கி மார்டோன்ஸ் அஜா. இப்போது சாண்டாண்டரில் (ஸ்பெயினின் வடக்கே) உள்ள மார்க்யூஸ் டி வால்டெசிலா மருத்துவமனையில் கத்தோலிக்க மதப் பராமரிப்பு சேவையில் பணிபுரியும் ஒரு சாதாரண மனிதரான இவர், அந்த நேரத்தில் மெலிலாவில் இருந்த புலம்பெயர்ந்தோரை ஸ்பெயினின் பல்வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய அரசாங்கம் ஏற்பாடு செய்ததாக விவரித்தார்.

“நிக்கோவின் பெற்றோர்கள் ‘காரிடாஸ் டி பில்பாவோ’ மூலம் பில்பாவோவுக்கு வந்தனர். எனக்கு ஆங்கிலம் தெரிந்ததால், அவர்கள் குழுவில் என்னை இருக்கச் சொன்னார்கள்,” என்கிறார் இனாக்கி மார்டோன்ஸ்.

ஒரு சந்தர்ப்பத்தில், கர்ப்பமாக இருந்த மரியா, தனக்கு ஏதோ அசௌகரியம் இருப்பதாகச் சொன்னபோது, ​​அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க இனாக்கி மார்டோன்ஸ் அவர்களைச் சந்திக்கச் சென்றார்.

மார்டோன்ஸ் கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனடியாக மரியாவையும் பெலிக்ஸையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மரியாவுக்கு நல்லபடியாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தங்களைக் காப்பாற்றிய இனாக்கியின் பெயரையே அவரது மகனுக்கு வைத்தார் மரியா.

“பிறக்கப் போகும் குழந்தைக்கு உங்கள் பெயரை வைக்கலாமா என்று ஒருவர் நம்மிடம் கேட்பது ஒரு மகத்தான பரிசு, ஒரு பெரிய மரியாதை. அதன் பின்னர் அந்த குழந்தை சாதனைகளை அடைவது மேலும் மிகப்பெரிய மரியாதை,” என்றார்.

மரியாவின் இளைய மகன் நிக்கோலஸ் வில்லியம்ஸ் ஆர்தர், 2002-இல் பாம்ப்லோனாவில் பிறந்தார், அவரது சகோதர் இனாக்கி பிறந்து எட்டு ஆண்டுகள் கழித்து இவர் பிறந்தார்.

“எனது தந்தையும் தாயும் எங்களுக்காகச் செய்த நல்ல விஷயங்களை நான் எப்போதும் மறக்க மாட்டேன். அவர்கள் போராளிகள், அவர்கள் மரியாதை, கடின உழைப்பு ஆகியவற்றை எங்களுக்குள் புகுத்தினார்கள்,” என்று நிக்கோ ஸ்பானிஷ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

“உண்மை என்னவென்றால், அவர்களைப் பெற்றோராகப் பெற்றதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன், மேலும் என்னை ஒரு மகனாகப் பெற்றதில் அவர்கள் பெருமைப்படுவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சிக்கிறேன்,” என்றார்.

யூரோ  கோப்பை 2024 : புலம்பெயர் குடும்பத்து குழந்தைகள், ஸ்பானிஷ் சூப்பர் ஸ்டார்களாக மாறிய கதை

எல்லாவற்றிற்கும் சகோதரத்துவமே காரணம்

குடும்பத்தை வழிநடத்த நல்ல வேலை வாய்ப்புகள் இல்லாமல் போனதால், ஃபெலிக்ஸ் வில்லியம்ஸ் லண்டனுக்குக் குடிபெயர்ந்தார். அங்கு அவர் மேஜைகளைச் சுத்தம் செய்தார். செல்சீ எஃப்.சி ஸ்டேடியத்தின் நுழைவாயில் உட்பட சில இடங்களில் பாதுகாப்புக் காவலராகவும் பணியாற்றினார்.

பத்து வருடங்களாகத் தந்தை பணி நிமித்தமாக வீட்டை விட்டுப் பிரிந்து வாழ்ந்த போது இனாக்கி தன் தம்பி நிக்கோவிற்குத் தந்தையாக மாறினார். குடும்பத்தை ஆதரிப்பதற்காக மரியாவும் ஒரே நேரத்தில் மூன்று வேலைகளில் சேர்ந்தார்.

இனாக்கி நிக்கோவைப் பள்ளியிலிருந்து அழைத்து வந்து ஏதாவது சாப்பிடக் கொடுப்பார்.

ஒரு பெரிய விளையாட்டு வீரராக வெற்றிபெற விரும்பினால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் இனாக்கி நிக்கோவுக்குச் சொல்லிக் கொடுத்தார்.

“என்னை அண்ணன் தான் வழிநடத்தினார். அவர் தான் எனக்கு எல்லாமே,” என்று இனாக்கி பற்றி நிக்கோ கூறி நெகிழ்ந்தார்.

“அண்ணனின் செயல்கள் என் பெற்றோருக்கும் எனக்கும் உதவியது. என்னைச் சாப்பிட வைத்து பள்ளிக்கு அழைத்து செல்வது, ஆடை அணிய உதவுவது எல்லாமே அண்ணன் தான்,” என்றார்.

“எங்களுக்குள் அதிக ஒற்றுமை இருந்தது, அவர் என் சகோதரர் மட்டுமல்ல அப்பாவாகவும் இருந்தார்,” என்றார் நிக்கோ.

2021-ஆம் ஆண்டு, ஏப்ரல் 28-ஆம் தேதி ‘அத்லெடிக் பில்பாவோ’ மற்றும் ‘ரியல் வல்லாடோலிடில்’ அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் (முடிவு 2-2) இந்தச் சகோதரர்கள் மாற்று (substitutes) வீரர்களாகக் களமிறங்கினர். அவர்களின் கால்பந்து பயணம் தொடங்கியது இப்படி தான்.

நிக்கோ ஸ்பெயினுக்காக விளையாடினார். இனாக்கி ஸ்பெயினுக்காக விளையாடவில்லை, ஏனெனில் அவர் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் தனது பூர்வீக தேசத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் கானா அணிக்காக விளையாட முடிவு செய்தார்.

இளம் ஸ்டாரான லாமின்

லாமின் யமாலின் பெற்றோரும் ஆப்பிரிக்காவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள்.

அவரது தந்தை மௌனிர் நஸ்ரூய் மொராக்கோவில் பிறந்தார், அம்மா ஷீலா எபானா, ஈக்வடோரியல் கினியாவைச் சேர்ந்தவர். இருவரும் பார்சிலோனாவின் புறநகரில் குடியேறினர்.

ஞாயிற்றுக்கிழமை யூரோ இறுதிப் போட்டிக்கு முன் நஸ்ரூய் செய்தியாளர்களிடம் பெருமையுடன், “லாமின் பிறந்த தருணத்தின் போதே, அவர் ஒரு நட்சத்திரமாக மாறுவார் என்று எனக்குத் தெரியும்,” என்றார்.

குழந்தையாக இருக்கும் போதே, உலகக் கால்பந்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸியை லாமின் சந்தித்தார். அப்போது அர்ஜென்டினா நட்சத்திரமான மெஸ்ஸிக்கு 20 வயது தான் இருக்கும். அவர் யுனிசெஃப் அமைப்பின் ஒரு தொண்டு பிரசாரத்தில் பங்கேற்றார். அப்போது மெஸ்ஸி எஃப்.சி பார்சிலோனா மைதானத்தில் லாமின் யமல் என்ற குழந்தையுடன் போஸ் கொடுத்தார். அந்த லாமின் தான் இப்போது கால்பந்து வீரராக வளர்ந்து நிற்கிறார்.

“இது வாழ்க்கையில் ஒரு தற்செயல் நிகழ்வு. அல்லது லாமைனிடமிருந்து லியோவுக்கு கிடைத்த ஒரு ஆசீர்வாதம்,” என்று வேடிக்கையாகப் பேசிய லாமினின் தந்தை இதனைச் சொல்லிவிட்டுச் சிரித்தார்.

இது பார்சிலோனா பகுதியில் இருந்து வெகு தொலைவில் உள்ள தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியான ரோகாஃபோண்டாவில் தான் லாமைனின் கால்பந்து பயணம் தொடங்கியது. ஒரு கான்கிரீட் கோர்ட்டில் விளையாட ஆரம்பித்தார்.

“அவர் எப்பொழுதும் தன்னை விட அதிக வயதுடைய பதின்பருவத்தினருடன் விளையாடுவதற்காக விளையாட்டு மைதானத்துக்குச் சென்றார். ஆம், அவர்கள் அனைவரைக் காட்டிலும் லாமின் விளையாட்டில் முதிர்ச்சியடைந்துவிட்டார். இதற்குப் பங்களித்த அனைவரையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன்,” என்று அவரது தந்தை கூறினார்.

பிரகாசமான எதிர்காலம்

லாமினின் திறமையைக் கண்டு, அவர் பார்சிலோனாவுக்காக விளையாட அழைத்துச் செல்லப்பட்டார் மற்றும் ‘லா மாசியா’ நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்,

‘லா மாசியா’ என்பது பார்சா கிளப்பின் கிளப்ஹவுஸ் ஆகும். அங்கு தான் மெஸ்ஸி ஒரு கால்பந்து வீரராகப் பயிற்சி பெற்றார் மற்றும் அங்கு அவர் தங்குமிடம், உணவு, கல்வி மற்றும் கால்பந்து மேம்பாடு ஆகியவற்றைக் கொண்டிருந்தார்.

அதன் பின்னர் சாதனைகள் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ந்தன. லாமின், 15 வயதில் 290 நாட்களில் பார்சிலோனா அணிக்காக விளையாடிய இளம் வீரராக ஆனார்.

லாமின், 16 ஆண்டுகள் மற்றும் 57 நாட்களில் ஸ்பெயினின் இளம் வீரர் மற்றும் கோல் அடித்த ஸ்டார் ஆனார். மேலும் இந்த யூரோ கோப்பையில் அவர் சாம்பியன்ஷிப் வரலாற்றில் கோல் அடித்த இளம் வீரர் என்ற சாதனையையும் பெற்றிருக்கிறார்.

அவருக்குக் கிடைத்திருக்கும் இந்தப் புகழுக்கு அப்பால், அவரது கொண்டாட்டங்களில் அவரது ரோகாஃபோண்டா பகுதியின் நினைவுகள் எப்போதுமே கலந்திருக்கிறது. ‘304’ என்ற எண்ணை அவர் விரல்களால் குறிப்பிடுகிறார். அது ரோகாஃபோண்டாவின் அஞ்சல் குறியீடு ஆகும். லாமின் எப்போதுமே தனது பூர்வீக வேர்களைப் பற்றி கொண்டுப் பெருமைப்படுகிறார்.

உன்னத நட்பு

ஸ்பெயின் கால்பந்து அணியில், நிக்கோ தன்னோடு அனைத்திலும் ஒன்றிப் போகும் லாமின் என்னும் ஒரு புதிய துணையைக் கண்டுபிடித்தார். இனாக்கி நிக்கோவுக்கு ஆசானாக இருந்தது போன்று நிக்கோ லாமினுக்கு மூத்த சகோதரராக வழிநடத்துகிறார்.

“ஒன்றாகச் சிரித்து, மகிழ்ந்து, வெற்றி பெற்று, பரஸ்பர மதிப்பைக் கொண்டிருக்கும் இரண்டு இளம் கால்பந்து வீரர்கள் ஸ்பெயின் அணியின் சிறந்த பிம்பத்தை பிரதிபலிக்கின்றனர்,” என்று ஸ்பெயின் நாட்டின் ‘ஸ்போர்ட்’ என்னும் செய்தித்தாளின் இயக்குநர் ஜோன் வெஹில்ஸ் பிபிசி முண்டோவிடம் கூறினார்.

அவர்கள் செய்யும் அனைத்தும் பிரபல நிகழ்வாகிவிட்டது. ஒவ்வொரு கோல்களையும் கொண்டாட அவர்கள் இணைந்து ஆடும் நடனங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

கொலம்பியா மற்றும் பிரேசிலுக்கு எதிரான ஸ்பெயினின் நட்புப் போட்டிகளுக்கு முன்னதாக, மார்ச் மாதம் தேசிய அணிக்கான பயிற்சி தொடங்கியபோது அவர்களின் நட்பு மலர்ந்தது. ​​பயிற்சியாளர் லூயிஸ் டி லா ஃபுவென்டே, இளம் வீரர் லாமின் யமாலைப் பார்த்துக் கொள்ளுமாறு நிக்கோவிடம் சொன்னது தான் அவர்கள் நட்பின் ஆரம்ப புள்ளி.

நிக்கோ 16 வயது லாமினுக்கு வழிகாட்டியாக இருக்க ஒப்புக்கொண்டார்.

இவர்களது நட்பை பார்க்கும் பலருக்கு நிக்கோ தனது சகோதரர் இனாக்கியுடன் பழகுவதைப் பார்ப்பது போல் இருக்கும்.

“நீ உன் தந்தையிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் யமாலிடம் பலமுறை கூறியுள்ளேன், அந்தத் தந்தை நான் தான்,” என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் நிக்கோ.

இனாக்கி மார்டோன்ஸைப் பொறுத்தவரை, “நிக்கோ மற்றும் யமாலின் வாழ்க்கைப் பயணம் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இருக்கும் பலருக்கு உத்வேகம் கொடுக்கும்,” என்றார்.

பிபிசி தமிழ்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )