மின்சார கட்டணத்துடன் இணைக்கப்பட்ட கட்டடத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கதிர்காமத்தில் சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டு, ஜி.ராஜபக்ஷ என்ற பெயரில் மின்சாரக் கட்டணத்துடன் இணைக்கப்பட்ட கட்டடத்திற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்துள்ளார்.
கேள்விக்குள்ளாகியுள்ள குறித்த கட்டிடம் கதிர்காமம் மாணிக்கக் கங்கைக்கு அருகில் உள்ள முன்பதிவு காணியில் 12 அறைகளைக் கொண்ட கட்டிடம் ஆகும்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் சம்பவம் பற்றி (CID) வினவிய போது, முன்னாள் ஜனாதிபதி குறித்த சொத்துக்களுடன் தமக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ளார், அதேவேளை மின்சாரக் கட்டணம் தொடர்பில் தனக்குத் தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டிடம் கட்டப்பட்டது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை முதலில் நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஆரம்பிக்கப்பட்ட போதிலும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அது நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ச 2025 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனுமான யோஷித ராஜபக்ச இதற்கு முன்னர் ஜனவரி 03 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டார். இரண்டு ராஜபக்சேக்களும் சொத்துக்களுடனான தொடர்பை மறுத்துள்ளனர்.
குறித்த சொத்து 2010 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்டதாகவும் இராணுவக் குழு ஒன்றின் உழைப்பினால் கட்டப்பட்டதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
யோஷித ராஜபக்சவின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ள இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஒருவரே கட்டடத்தின் கட்டுமானப் பணிகளுக்குப் பின்னர் கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.