பொய்யால் வாழ முற்படுவதை தற்போதாவது தேசிய மக்கள் சக்தி கைவிட வேண்டும்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வீழ்ச்சி பயணம் ஆரம்பமாகியுள்ளது என்பதையே கூட்டுறவு தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “மக்களை உசுப்பேற்றியே தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியது. தற்போதும் அவ்வாறு செய்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. சிலரை சில நாட்கள் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது. எனவே, பொய்யால் வாழ முற்படுவதை தற்போதாவது தேசிய மக்கள் சக்தி கைவிட வேண்டும்.
கூட்டுறவு தேர்தல் முடிவுகள் பெறுபேறுகளை பார்த்த பிறகே மக்களை உசுப்பேற்றுவதற்கு ஆளுங்கட்சி முற்படுகின்றது. எனினும், இரவில் விழுந்த குழிக்குள் பகலில் பாய்வதற்கு மக்கள் தயாரில்லை. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்களுக்கு பிறகுதான் கூட்டுறவு தேர்தலில் தோல்வி அடைந்தது.
ஆனால் தேசிய மக்கள் சக்தி இரு மாதங்களுக்குள்ளேயே கூட்டுறவு தேர்தலில் மண்கவ்வியுள்ளது. அரசாங்கத்தின் வீழ்ச்சி பயணம் ஆரம்பமாகியுள்ளது என்பதையே இது எடுத்துகாட்டுகின்றது. வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மாத்திரமே இதனை தடுக்க முடியும்.” என தெரிவித்துள்ளார்.