மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள காணியின் வழக்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள காணியின் வழக்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் உள்ள தமது சொந்த காணியில் எல்லை அமைத்த நிலையில் அதனை தடுத்து நிறுத்தி சேதம் விளைவித்ததாக தெரிவித்து முன்னாள் இராஜாக அமைச்சர் உட்பட சிலர் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று புதன் கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதி மன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தோனா பகுதியினை சிலர் அபகரிப்பதற்காக தொடர்ச்சியான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும், 26.05.2024 ஞாயிற்றுக்கிழமையன்று குறித்த பகுதியில் பாதுகாப்பு கமராக்களை பூட்டி அப்பகுதியில் வேலிகள் இடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

இந் நிலையில் சம்பவம் தொடர்பில் அப்போதைய இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மாநகர முன்னாள் முதல்வர் தியாகராஜா சரவணபவன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதேவேளை குறித்த பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்ட சிவநேசதுரை சந்திரகாந்தன், கோவிந்தன் கருணாகரம், தியாகராஜா சரவணபவன், பூபாலப்பிள்ளை பிரசாந்தன், சண்முகலிங்கம் சுரேஸ்குமார் ஆகியோர் குறித்த செயற்பாட்டை தடுத்து நிறுத்தியதாக ஊடகங்களில் செய்தி  வெளியானது.

இந்நிலையில் குறித்த காணி தமக்குரிய தனியார் காணி எனவும் அங்கு பொருத்தப்பட்டிருந்த தமது உடைமைகளுக்கு சேதம் விளைவித்ததாகவும் தெரிவித்து குறித்த காணியின் உரிமையாளர் என சொல்லப்படும் நபர் ஒருவர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதி மன்றுக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )