இந்திய மீனவர்களே பிரச்சினைக்கு காரணம்

இந்திய மீனவர்களே பிரச்சினைக்கு காரணம்

“வடக்கு, கச்சதீவு கடற்பரப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவமானது குறித்த இந்திய படகிலிருந்த மீனவர்களின் முறையற்ற செயற்பாடுகளினாலேயே இடம்பெற்றது.

கடல் எல்லையிலிருந்து விலகிச் செல்லுமாறு அறிவிப்பு விடுத்தும் அதனை பின்பற்றாமல் செயற்பட்டமை, சட்டவிரோதமாகவும் ஆக்கிரமிக்கும் வகையிலும் செயற்பட்டு அதிகாரிகளை தாக்கி அவர்களை சுற்றிவளைத்து அடிபணியவைக்கும் வகையில் செயற்பட்டமை மற்றும் கடற்படை அதிகாரிகளின் கைகளிலிருந்த துப்பாக்கியை கைப்பற்றுவதற்கு முற்பட்டமையின் காரணமாகவே துரதிர்ஷ்டவசமாக துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது” என்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பீ.ஏ.கே.எஸ்.பீ. காஞ்சன பானகொட தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் நேற்று (29) பாதுகாப்பு அமைச்சின் பிரதான அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் அவர்,”தேசிய கடல்வள பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே கடற்படைக்குரிய படகொன்றும் கடல்வள பாதுகாப்பு பிரிவுக்குரிய படகொன்றும் கடந்த 27ஆம் திகதி ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.

அதன்போதே இந்தியாவுக்குரிய அந்த படகு அடையாளங்காணப்பட்டுள்ளது. அதன்போதே பரிசோதனைக்குட்படுத்தவும் முயற்சித்துள்ளார்கள்.

இரவு 9.30 மணிக்கு புறப்பட்ட இந்தப் படகுகள் கடல் எல்லை வரை பயணித்துள்ளன. அதன்போதே இந்தியாவுடன் தொடர்புடைய இலட்சினை மற்றும் நிறம் கொண்ட படகு என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதன்போது, தேசிய சட்டதிட்டங்களுக்கமைய அவர்களால் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பதற்கு இடமளிக்க முடியாது என்பதால் குறித்த படகை கடல் எல்லையிலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அந்தக் கட்டளைக்கமைய குறித்த படகை கடல் எல்லையிலிருந்து விலகிச் செல்லுமாறு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், அந்த அறிவிப்பை செவிமடுக்காமல் குறித்த இந்தியப் படகு தொடர்ந்து செயற்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்தியதன் காரணமாகவே மீன்பிடி படகுக்கு அருகில் சென்று அவர்களை தடுத்து நிறுத்துமாறு கடற்படை அதிகாரிகளுக்கு கட்டளைப் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த கட்டளையை பிறப்பிப்பதற்கு முன்னர் ஒளி மற்றும் சத்தம் எழுப்பி தடுத்து நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதும் அதனை கருத்திற்கொள்ளாமல் செயற்பட்டமை சட்டவிரோதமாக மற்றும் ஆக்கிரமிக்கும் வகையில் செயற்பட்டமையின் காரணமாகவே படகுக்கு அருகில் சென்று படகில் நுழைந்து பரிசோதனைகளை முன்னெடுக்க நேர்ந்தது.

அதனடிப்படையில் முதலில் இரு இராணுவ அதிகாரிகளே குறித்த மீன்பிடி கப்பலுக்குள் நுழைந்தார்கள். அதன்போது, படகை நிறுத்துவதற்காக இந்தியப் படகின் பிரதான கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அதிகாரிகள் சென்றபோது, அங்கிருந்த இந்தியப் பிரஜைகள் ஆக்கிரமிக்கும் வகையில் செயற்பட்டு, அதிகாரிகளை தாக்கி அவர்களை சுற்றிவளைத்து அடிபணியவைக்கும் வகையில் செயற்பட்டமை மற்றும் கடற்படை அதிகாரிகளின் கைகளிலிருந்த துப்பாக்கியை கைப்பற்றுவதற்கு முற்பட்டமையின் காரணமாகவே துப்பாக்கி செயற்பட நேர்ந்தது.

இதன்போது, இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இந்திய மீனவர்கள் இருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயங்களுக்குள்ளான இருவரையும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தோம். படகு நிறுத்தப்பட்டதன் பின்னர் அந்த படகை பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதன்போது சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட மீன்கள் அந்தப் படகில் இருந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த படகு எமது கடற்பரப்புக்குள்ளேயே கைப்பற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த படகில் பிடிக்கப்பட்ட மீன்கள் இருந்தமையினால் இவர்கள் சட்டவிரோதமாக கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்கள் என்பது உறுதியாகிறது.

எமது கடற்பரப்பில் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளமையும், கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளார்கள் என்பதும் எமது கடற்படை அதிகாரிகளை ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும் வகையிலும் கடமைகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் காரணமாக இந்திய மீனவர்கள் சிலரை கடற்படை முகாமுக்கு அழைத்து வந்தோம். அவர்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கு முன்னர் காயங்களுக்குள்ளான மீனவர்களுக்கு முதலுதவிகளை உடனடியாக வழங்கவும் விரைந்து யாழ். பிரதான வைத்தியசாலையில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுத்தோம். தற்போதும் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்நலம் சீராகியுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்று பல்வேறு சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்த சம்பவம் இடம்பெற்ற தினத்திலிருந்து மூன்று தினங்களுக்கு முன்னர் இதேபோன்ற இன்னுமொரு ரோந்து நடவடிக்கையையும் முன்னெடுத்திருந்தோம். இந்த சம்பவம் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை, கடற்பரப்புக்கு அண்மையிலேயே இடம்பெற்றது.

இதுபோன்ற சுற்றிவளைப்புகளின்போது கடற்படை அதிகாரிகள் தொழில்முறை ரீதியாகவும் சரியான ரீதியிலும் கடமைகளை செய்துள்ளார்கள். இந்தச் சம்பவத்தை பொறுத்தவரையில் சட்டத்துக்கு புறம்பாகவும் கடற்படை அதிகாரிகளுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமையின் காரணமாகவே குறித்த மீன்பிடி படகில் ஆயுதங்களுடன் நுழைய நேர்ந்தது. அதனால் ஏற்பட்ட மோதல் நிலைமையினாலேயே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் துப்பாக்கி ரவை வெளியேறிய பகுதியை பரிசோதனைக்குட்படுத்தியபோது, இந்த துப்பாக்கிச்சூடு தவறுதலாக இடம்பெற்றுள்ளது என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )