முதியோர் காப்பகத்தில் தீ விபத்து ; மூவர் பலி
பிரான்ஸில் புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் பரிஸ் பௌபேமாண்ட் நகரிலுள்ள முதியோர் காப்பகமொன்றின் சலவை அறையில் நேற்று முன்தினம் (01) திடீரென தீப்பிடித்தது. பின்னர் தீயானது ஏனைய பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.
தீப்பற்றிய மூன்றாவது தளம் முழுவதும் புகை மண்டலமானது. இந்தப் புகையை சுவாசித்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறலில் 3 பேர் உயிரிழந்ததோடு 9 பேர் காயமடைந்தனர். சிலர் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
இதனால் குறித்த காப்பகத்தில் இருந்த முதியவர்கள் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்த 9 பேரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதோடு அவர்களுக்குரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.