
இலங்கை கடற்படையினரின் கைதுகளுக்கு எதிராக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் !
இலங்கையின் கடற்படையினர் தொடர்ந்தும் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்வதை எதிர்த்தும், மத்திய அரசு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியும், இந்திய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமை தாங்கினர்.
அத்துடன், ஏனைய எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
“தமிழ் கடற்றொழிலாளர்களுக்கு நீதி, “எங்கள் கடற்றொழிலாளர்களை மீண்டும் அழைத்து வாருங்கள்”, “இனி கைதுகள் வேண்டாம்”, “தமிழ்நாடு கடற்றொழிலாளர்களும் இந்தியர்களே” போன்ற வாசகங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏந்தியிருந்தனர்.
இந்த நிலையில் தமிழ் கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் ஒரு தேசியப் பிரச்சினை என்றும், அவர்கள் இலங்கையால் தவறாக நடத்தப்படும் இந்தியர்கள் என்றும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா இதன்போது தெரிவித்துள்ளார்.
கைதுகள் காரணமாக இந்திய கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல பயப்படுவதாகவும், இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின் இந்த விவகாரம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு பலமுறை கடிதம் எழுதி, நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படை தமிழக கடற்றொழிலாளர்களை கைது செய்து துன்புறுத்தி வருகிறது. தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த கிட்டத்தட்ட 97 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.