
கல்வி சீர்திருத்தத்திற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்க வாய்ப்பு
எதிர்காலத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும், கல்வி சீர்திருத்தத்திற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்களுக்கு இடையில் அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
ஆசிரியர், அதிபர் மற்றும் ஆசிரியர் ஆலோசனை சேவைகளிலும், கல்வித் துறையிலும், உள்ள பல பிரச்சினைகள குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
இந்த சேவைகளில் பதவி உயர்வுகள், சம்பள முரண்பாடுகள், தொழில்முறை பிரச்சினைகள், ஆசிரியர் அதிபர் சேவையில் (தேசிய மற்றும் மாகாண) முறையான இடமாற்றங்கள், பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்தல் மற்றும் நிதி சேகரித்தல், தேசிய பாடசாலைகளில்; அதிபர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு, புதிய கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் பிரிவேனா அமைப்பில் உள்ள சிக்கல் நிலைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
மேலும், அரச சார்பற்ற பாடசாலைகளில் கட்டணம் அறவிடுவது, ஒரு வகுப்புக்கு 35 மாணவர்களை மட்டுப்படுத்துவது, வகுப்பு அளவுகளை மட்டுப்படுத்துவது மற்றும் ஆசிரியர் ஆலோசனை சேவைக்கான போட்டிப்பரீட்சைகளை நடத்துவது போன்ற பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டன.
பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும்போது, வெற்றிடங்கள் இல்லாத பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், கல்வி அமைச்சு இதற்காக கடிதங்களை வெளியிட மாட்டாது என்றும், எதிர்காலத்தில் ஆசிரியர்கள் உட்பட அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர மேலும் சுட்டிக்காட்டினார்.