பாகிஸ்தானை ஆள்வது இராணுவ தளபதி என்பது குழந்தைக்கு கூட தெரியும்

பாகிஸ்தானை ஆள்வது இராணுவ தளபதி என்பது குழந்தைக்கு கூட தெரியும்

ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில், அடக்குமுறை மற்றும் பாசிசத்தின் பிடியில் பாகிஸ்தான் சிக்கியுள்ளது என்று இம்ரான் கான் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவரது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“பாகிஸ்தான் ராணுவத்தின் நம்பகத்தன்மை அழிக்கப்படுகிறது என்பதை இராணுவப் பிரிவு செய்தித் தொடர்பாளரிடம் சொல்ல விரும்புகிறேன். அரசியலில் தலையிட மாட்டோம் என இராணுவம் கூறுகிறது. ஆனால் பாகிஸ்தானை ஆள்வது ராணுவ தளபதி ஆசிம் முனீர் என்பது குழந்தைக்கு கூட தெரியும்.

கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிடாத மொஹ்சின் நக்வி(உள்துறை மந்திரி) போன்ற ஒரு மனிதரிடம் நாடு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போது கிரிக்கெட் முதல் நாட்டின் உள்துறை மற்றும் வெளி விவகாரங்கள்துறை வரை அனைத்தையும் அவர் கட்டுப்படுத்துகிறார். அடக்குமுறை மற்றும் பாசிசத்தின் பிடியில் பாகிஸ்தான் சிக்கியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். தெஹ்ரீக்-ஈ-இன்சாப் கட்சியின் தலைவர்களை கைது செய்வதற்கும், தேர்தல் மோசடிகளை மறைப்பதற்கும் மட்டுமே அரசு அமைப்பு வேலை செய்கிறது. மக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாகிவிட்டது.

ஜனநாயகம் எங்கு வளர்கிறதோ, அங்கு முன்னேற்றமும் இருக்கும். கிழக்கு ஜெர்மனி சர்வாதிகார ஆட்சியின் கீழ் இருந்தது, மேற்கு ஜெர்மனி ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டது. இதனால் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கு ஜெர்மனி எவ்வாறு செழிப்படைந்தது என்பதை உலகம் கண்டது.

சோவியத் யூனியனும் 1970-களில் விரைவான வளர்ச்சியைக் கண்டது. ஆனால் சர்வாதிகார கொள்கைகள் அதன் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. அதே சமயத்தில் அமெரிக்கா வேகமாக முன்னேறியது. சோவியத் யூனியனில் நடந்ததைப் போன்ற நிலையை இன்று பாகிஸ்தானில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.” இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )