கோடிகளை வாங்கிய அரசியல்வாதிகளே இன்று கோடிகளை பற்றி பேசுகின்றனர்
கோடிகளை வாங்கிய அரசியல்வாதிகளே, இன்று கோடிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர் என ஐக்கிய ஜன நாயகக் குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி அனுஷா சந்திர சேகரன் தெரிவித்தார்.
தலவாக்கலையிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
“இலங்கையில் கொள்கை அரசியலை முன்னெடுத்த பெருந் தலைவர் அமரர் சந்திரசேகரனின் மகள்தான் நான். மாறாக கோடிகளுக்கு விலைபோகும் நபர் கிடையாது. 2020 பொதுத்தேர்தலில் நான் சுயேச்சையாக களமிறங்கி இருந்தேன். அப்போது கூட முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடம் 20 கோடி ரூபாய் பணம் வாங்கிவிட்டே தேர்தலில் போட்டியிட்டதாக எதிரணி தரப்பில் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல வாக்குகளை சிதறடிப்பதற்காகவே நான் களமிறக்கப்பட்டுள்ளேன் என்றெல்லாம் கூட தகவல்கள் பரப்பட்டன. ஆனால் இவைடி எதுவும் உண்மை அல்ல. எனது தந்தையின் நண்பர்களின் உதவியுடன் தான் பொதுத்தேர்தலை எதிர்கொண்டேன். தேர்தலில் மக்கள் எனக்கு ஆதரவு வழங்கி இருந்தனர்.
எனினும், பாராளுமன்றத்துக்கு தெரிவாகக்கூடிய வாக்குகளை நோக்கி நகரமுடியவில்லை. இவ்வாறு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறாததால் அரசியல் ரீதியில் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டேன். எனக்காக வேலை செய்த தொண்டர்களைக்கூட பழிவாங்கினார்கள்.
இதற்கு எதிராக குரல் எழுப்பினேன். அவ்வாறு குரல் எழுப்பும்வேளைகளில் பழிவாங்கல்கள் அதிகரித்தன. அதன்பின்னர் அமைதி காத்தேன். அடக்கு முறைகள் குறைந்தன.
எனவே, அரசியலில் அமைதியும் தேவையெனக் கருதி அமைதி காத்தேன். பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்காத நான் ஐந்து வருடங்கள் எங்கே சென்றேன் எனக் கேட்கின்றனர்.
ஆனால் பாராளுமன்றம் சென்ற எமது மலையக பிரதிநிதிகள் என்ன செய்தனர்? தொலைக்காட்சி விவாதங்களில்கூட அடித்துக் கொள்ளும் நிலைமை அல்லவா
காணப்பட்டது?
பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து களமிறங்க வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது. எனினும், அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதன்பின்னர் சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டிருந்தேன்.
அவ்வேளையிலேயே தலைவர் ரஞ்சன் ராமநாயக்க என்னை அழைத்து கதைத்தார். ஊழல் அற்ற அரசியலை செய்வதற்காக புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளதாகக் கூறினார்.
அதில் போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டார். ஐக்கிய ஜனநாயகக் குரல் என்ற அந்த கட்சியின் கொள்கை பிடித்திருந்தது. அதனால்தான் அக்கட்சி ஊடாக களமிறங்கியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.