
பெரியநீலாவணையில் சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்
இரண்டு தடவைகள் பொதுமக்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் மீறி மீண்டும் பெரியநீலாவணையில் மதுபானசாலை கடந்த செவ்வாய்க்கிழமை (11) திறந்து வைக்கப்பட்டதையடுத்து தொடர் ஆர்ப்பாட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.
பொதுமக்கள் மூன்றாவது முறையாகவும் ஆர்ப்பாட்டத்தை, கொளுத்தும் வெயிலில் ஞாயிற்றுக்கிழமையும் (16) முன்னெடுத்துள்ளனர்.
சவப்பெட்டி சகிதம் ஏராளமான பொதுமக்கள் குறித்த மதுபானசாலைக்கு முன்பாக பெரியநீலாவணையில் உள்ள இரண்டு மதுபான சாலைகளையும் மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்த போது இங்கு அரசியல்வாதிகள் தேவையில்லையென சிலர் முரண்பட்ட நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்ட போதிலும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றுள்ளனர்.
மேலும் இத்போது பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார்.