
எதிரணிகளை பாராளுமன்றத்துக்குள் முடக்கிவைத்துவிட்டு உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது
எதிரணிகளை பாராளுமன்றத்துக்குள் முடக்கிவைத்துவிட்டு உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தினார்.
எனவே, பாதீட்டு கூட்டத்தொடர், சாதாரண தரப்பரீட்சை, தமிழ், சிங்களப் புத்தாண்டு என்பன முடிந்த பின்னர் பொருத்தமானதொரு நாளில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (17) நடைபெற்ற உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ” மார்ச் 21 ஆம் திகதிவரை வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர் நடைபெறும். பாதீட்டு விவாதமென்பது எதிரணிகளுக்கு முக்கியம். எனவே, எம்மை நாடாளுமன்றத்துக்குள் வைத்துவிட்டு தேர்தல் நடத்தப்படக்கூடாது.
பொருத்தமானதொரு சூழ்நிலையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும். மாத கணக்கத்தில் தேர்தலை பிற்போடுமாறு கோரவில்லை.
சாதாரணதரப்பரீட்சை நடைபெறவுள்ளது. தமிழ், சிங்கள புத்தாண்டு நடைபெறவுள்ளது. சுமார் 10 நாட்கள்வரை விடுமுறை காலப்பகுதி உள்ளது. எனவே, அரச சேவையாளர்களுக்கு நெருக்கடி நிலை உருவாகும்.
எனவே, தேர்தல் திகதி தொடர்பில் சுயாதீனமாக தீர்மானம் எடுக்குமாறு நாம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
ஏற்கனவே செலுத்திய கட்டுப்பணமும் மீள செலுத்தப்படவில்லை. எமக்கு நிதி நெருக்கடி உள்ளது. எனவே, அதனை மீள செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.