
வித்யா படுகொலை – SDIG க்கு கடூழிய சிறைத்தண்டனை
வித்யா கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான சுவிஸ் குமாரை தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில் வடமாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.மிஹால் 4 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
புங்குடுத்தீவு மாணவி வித்யா கொலை வழக்கின் குற்றவாளியான சுவிஸ்குமாரை தப்பிக்க உதவிய வழக்கு இன்று (20) வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்றது.
இதன்போது சுவிஸ்குமாரை பணம் பெற்று தப்பிக்க உதவிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் அப்போதைய வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், 50 ஆயிரம் ரூபாய் குற்றப்பணமும் அறவிடப்பட்டது.
மற்றைய சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் சிறிகஜனுக்கு 4 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், குறித்த நபர் நாட்டை விட்டு தப்பிச் சென்றதால் அவருக்கு திறந்த பிடியாணையும் வவுனியா மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது.
குறித்த வழக்கை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக அரச சட்டத்தரணி நிசாந் நாகரட்ணம் நெறிப்படுத்தியிருந்தார்.
யாழ்ப்பாணம், புங்குடுத்தீவை சேர்ந்த பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா, 2015 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கொலைக் குற்றவாளிகள் ஏழு பேருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.