
ரோஹினி கவிரத்னவை விமர்சித்த பிரதியமைச்சர் ! கொந்தளித்த தேசிய மக்கள் சக்தியின் பெண் எம்.பி
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தொடர்பில் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்த கருத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் கௌசல்யா ஆரியரத்ன தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘தான் அப்போது அவையில் இல்லாவிட்டாலும், பெண்ணியக் கொள்கைகளுக்காக நிற்கும் ஒரு பெண்ணாக, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் பொருத்தமற்ற அறிக்கையை வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் (22) நலின் ஹேவகே நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, ரோஹினி கவிரத்னவை விமர்சித்ததோடு அவரை வேறு ஒரு குடும்பப் பெயரிலும் அழைத்தார்.
இதனையடுத்து, எழுந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, பிரதியமைச்சரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அதனை ஹன்சார்டிலிருந்து நீக்குமாறும் கோரினார்.
இதனால் ஹர்ஷ டி சில்வாவிற்கும் பிரதி அமைச்சர் ஹேவகேவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்போது, ரோஹினி கவிரத்ன என்ற பெயரை உடைய வேறொரு நபரையே தான் குறிப்பிட்டதாகக் கூறியதையடுத்து, விவாதம் தீவிரமடைந்தது.
இதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் பிரதம கொறடாவான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, பிரதியமைச்சர் சார்பில் மன்னிப்புக் கோரும் வகையில் குறித்த வார்த்தையை ஹன்சார்டிலிருந்து நீக்க கோரினார்.
அதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தொடர்பில் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்த கருத்தை உத்தியோகபூர்வமாக ஹன்சார்டில் இருந்து நீக்குவதற்கு நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.