
சரும அழகை மேம்படுத்தும் உணவுகள்
சரும அழகை பாதுகாப்பதில், ஆன்டி ஆக்ஸிடென்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இயற்கை முறையில் முக பொலிவை கூட்டவும், ஸ்கின் டோனை அதிகரிக்கவும் ஆன்டி ஆக்ஸிடென்டுகளே வழிவகுக்கின்றன. ‘பேஸ் கிரீம்’களில் அதிகம் நிரம்பி இருப்பதும், இவையே.
இந்நிலையில், பேஸ் கிரீம்கள் இல்லாமல் ஒரு சில உணவு வகைகளிலும், இந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்திருக்கின்றன. அத்தகைய உணவுகளை உட்கொள்வதன் மூலமும் முகப்பொலிவை கூட்டலாம். அத்தகைய உணவு வகைகளை இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்.
* புரோக்கோலி
புரோக்கோலியில் லுடீன், ஜிக்ஸாந்தின் போன்ற கரோட்டினாய்டுகள் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன. இந்த புரோக்கோலி ஆண்டு முழுவதும் கிடைக்கும். இதனை பல்வேறு வழிகளில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வேகவைத்த புரோக்கோலி உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் அதை டிக்கா வடிவில் கூட சாப்பிடலாம்.
* கிட்னி பீன்ஸ் (ராஜ்மா)
ராஜ்மா என்று அழைக்கப்படும் இந்த கிட்னி வடிவ பீன்ஸில், புரதங்களும், அதிக ஆக்ஸிஜனேற்றிகளும் உள்ளன. இவை முகப் பொலிவிற்கு வழிவகுப்பதோடு, முகப்பருக்களை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. இந்திய உணவில் ராஜ்மா மசாலா முக்கியமானது. இதனை சாதம், சப்பாத்தி, தோசை போன்றவற்றுக்கு ‘சைட் டிஷ்’ஷாக எடுத்துக் கொள்ளலாம்.
* கீரை
கீரை ஆன்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்தது மட்டுமின்றி ஊட்டச்சத்து மிக்கது என்பது பலரும் அறிந்த உண்மை. பச்சை இலை மற்றும் காய்கறிகளில் சருமத்திற்கு தேவையான பல்வேறு சத்துக்கள் அடங்கி இருக்கின்றன. இதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரசாயன கிரீம்கள் இல்லாமல் இயற்கையாகவே சருமத்தை பராமரிக்க முடியும். கீரையை நீங்கள் கூட்டாகவோ அல்லது உங்களுக்கு பிடித்த வடிவிலோ தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
* தக்காளி
பழ வகையைச் சேர்ந்த தக்காளி சமையலில் நிச்சயம் இடம் பெறும் உணவுப் பொருட்களில் ஒன்றாகும். தக்காளி ஆன்டி ஆக்ஸிடென்டுகளின் சிறந்த ஆதாரமாகும். தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுடன் சரும அழகை மேம்படுத்த நினைத்தால் அதற்கு ‘பெஸ்ட்’ உணவு தக்காளி குழம்பு தான்.
* ஊதா முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ் சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும். குறிப்பாக ஊதா நிற முட்டைக்கோஸ் ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த ஆதாரமாகும். இதில், வைட்டமின் சி நிரம்பியுள்ளது. முட்டைக்கோஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தசை வீக்கத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, உடலின் நச்சுத்தன்மையை நீக்கி, சரும பொலிவை மேம்படுத்தவும் துணைபுரிகிறது.
* உருளைக்கிழங்கு
இந்தியர்களின் மிக விருப்பமான காய்கறிகளில் உருளைக்கிழங்குக்கு முதலிடம் உண்டு. உருளைக்கிழங்குகளில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்ற கலவைகள் உள்ளன. மேலும் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை அதிக அளவில் நிறைந்து உள்ளதால் சரும அழகை பாதுகாக்கும்.