ஓய்வை அறிவித்தார் ரோஹித் !
சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி இரண்டாவது முறையாக கிண்ணத்தை சுவீகரித்தது.
வெற்றிக்கு பின் பேசிய இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா,
‘இதுவே எனது கடைசி ஆட்டம். விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை. நான் கிண்ணத்தை மோசமாக விரும்பினேன். வார்த்தைகளில் கூறுவது மிகவும் கடினம். இது நான் விரும்பியது மற்றும் நடந்தது. என் வாழ்க்கையில் இதற்காக நான் மிகவும் ஆசைப்பட்டேன். இந்த முறை கோட்டை கடந்ததில் மகிழ்ச்சி’ என தெரிவித்தார்.
ரோகித் சர்மா 159 டி20 போட்டிகளில் விளையாடி 4,231 ஓட்டங்களை குவித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் பட்டியலில் ரோகித் முதலிடத்தில் உள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளில் ஐந்து சதங்கள் பதிவுசெய்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
ரோகித் சர்மாவின் டி20 பயணம் 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ணத்துடன் தொடங்கியது.
குறித்த தொடரின் இறுதி போட்டியில் இந்தியா கிண்ணத்தை கைப்பற்ற முக்கிய காரணமாக ரோகித் சர்மா இருந்தமை குறிப்பிடத்தக்கது.