முப்படையிலுள்ள இஸ்லாமியர்களுக்கு ஹஜ் யாத்திரை இலவசம் !

முப்படையிலுள்ள இஸ்லாமியர்களுக்கு ஹஜ் யாத்திரை இலவசம் !

முப்படையிலுள்ள இஸ்லாமியர்களுக்கு ஹஜ் யாத்திரைக்கான இலவச வாய்ப்பை வழங்க சவூதி அரேபிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனின் விசேட கோரிக்கைக்கு அமைவாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் கலீத் ஹமட் அல்கதானியின் தலையீட்டில் இந்த வாய்ப்பு கிட்டியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய சவூதி அரேபிய தூதுவரினால் வருடாந்த ஹஜ் யாத்திரைக்கான 5 விசேட வாய்ப்புகளை அந்நாட்டு அரசாங்கத்தின் ஆதரவுடன் பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் துல்ஹஜ் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமையால் எதிர்வரும் 17 ஆம் திகதி ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படும்  என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று(07) நடைபெற்றது.

பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரநிதிகள், முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது நாட்டின் பல பகுதிகளில் துல்ஹஜ் மாத தலைப்பிறை தென்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்தமையினால் இலங்கை வாழ் முஸ்லீம்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி ஈதுல் அல்ஹா ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாட தீர்மானிக்கப்பட்டது.

அதற்கு முன்னைய நாள் அரபா நோன்பை நோற்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )