விஜயதாசவிற்கு எதிராக தடையுத்தரவு நீடிப்பு
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்திருந்த தடையுத்தரவை மேலும் நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (14) கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி சமரி வீரசூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மனுதாரர் துமிந்த திஸாநாயக்க சார்பில் சட்டத்தரணி எவரும் ஆஜராகவில்லை.
அதன்படி, குறித்த உத்தரவை நீடிப்பது தொடர்பான கோரிக்கை எதுவும் இல்லை என்பதால், அது நீட்டிக்கப்பட மாட்டாது என்று நீதிபதி குறிப்பிட்டார்.
குறித்த முறைப்பாட்டில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள விஜயதாச ராஜபக்ச மற்றும் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜயமுதிதா ஜயசூரிய, நீதிமன்றில் கோரிக்கை விடுத்து பதில் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரினார்.
எனினும், அதன் பின்னர் வழக்கு மீண்டும் அழைக்கப்பட்ட போது, மனுதாரின் சட்டத்தரணி நீதிமன்றில் முன்னிலையாகி சமர்ப்பணங்களை முன்வைத்து, தான் வேறொரு வழக்கில் ஆஜராகியிருந்ததால் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை எனவும் அதன்படி, வழக்கு தொடர்பான தடையுத்தரவை நீடிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று, வழக்கு தொடர்பான பதில்கள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதை ஜூலை 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், ஜூன் 28ஆம் திகதி வரை தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டது.