ஆஸ்துமாவை தூண்டும் ஆரோக்கியமான உணவுகள்
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், முதல் செவ்வாய் கிழமை உலக ஆஸ்துமா தினம் கொண்டாடப்படுகிறது. மூச்சுக்குழாய்கள் வீங்கி குறுகியிருக்கும் ஒரு நிலை ஆஸ்துமா எனப்படும்.
இந்த ஆஸ்துமா பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை சந்திப்பார்கள். ஆஸ்துமா வெறும் தூசிகளால் மட்டும் தூண்டப்படுவதில்லை. ஒருசில உணவுகளாலும் தூண்டப்படும்.
குறிப்பாக சில ஆரோக்கியமான உணவுகள் கூட ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்களின் நிலையை மோசமாக்கும். இப்போது அந்த உணவுகள் என்னவென்பதைக் காண்போம்.
முட்டை
முட்டை ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், ஆஸ்துமாவை தூண்டும். நமது உடல் முட்டையில் உள்ள புரோட்டீன்களுக்கு ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும். இந்த ஆன்டிபாடிகள் மூச்சுத்திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.
மீன்
மீனில் பார்வால்புமின் என்ற புரோட்டீன் உள்ளது. இந்த பார்வால்புமின் சிலருக்கு அழற்சியை உண்டாக்கும். அதுவும் மீன் சேராதவர்கள் இவற்றை உண்ணும் போது, அது ஆஸ்துமாவைத் தூண்டலாம்.
கோதுமை
கோதுமையில் உள்ள புரோட்டீனானது காற்றுப்பாதைகளை எரிச்சலடையச் செய்து வீக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. தற்போது கோதுமை பல உணவுகளில் காணப்படுகிறது. எனவே ஆஸ்துமா இருப்பவர்கள் கோதுமையை உணவில் சேர்க்கும் முன், ஒருமுறை மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
பால்
பால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. சுமார் 80 சதவீத குழந்தைகளுக்கு மாட்டுப் பால் ஆஸ்துமா அறிகுறிகளை தூண்டுவதாக தெரிய வந்துள்ளது.
வேர்க்கடலை
வேர்க்கடலையில் உள்ள புரோட்டின் சுவாசப் பாதைகளில் அழற்சியை ஏற்படுத்தி, ஆஸ்துமா அறிகுறிகளை தீவிரப்படுத்தலாம்.
எனவே உங்களுக்கு வேர்க்கடலை சாப்பிட்ட பின் ஏதாவது வித்தியாசமான அறிகுறிகளை உணர்ந்தால், உடனே வேர்க்கடலையை உணவில் இருந்து அகற்றுங்கள்.