தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தைத் தவிர்த்து நாட்டைக் கட்டியெழுப்ப நினைப்பது வெறும் கனவாகவே அமையும் !
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்திற்குப் புறம்பாக செயற்பட எவரேனும் கனவு கண்டால், இந்த நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
எனவே, இந்தப் பொருளாதார வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இந்நாட்டின் அனைத்துப் பிரஜைகளின் ஆதரவும் கிடைக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன,
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசேட விவாதம் ஜூலை 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. கடந்த காலங்களில் திறைசேரியில் டொலர் கையிருப்பு இருக்கவில்லை. நாடு கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. எரிபொருள் மற்றும் எரிவாயுக்கான வரிசைகள் உருவாகின.சமூகம் முழுமையாக வெறுப்புக் கலந்த சமூகமாக மாறி, நாடு முழுவதும் போராட்டங்கள் ஏற்பட்டன.
நாட்டைப் பொறுப்பேற்க எவரும் முன்வராத வேளையில், பிரதமராகவும், முதிர்ந்த அரசியல்வாதியாகவும் அனுபவம் வாய்ந்த ரணில் விக்ரமசிங்க அந்தச் சவாலை ஏற்று நாட்டை ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார். அவர் செய்த முதல் விடயம், சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்று நீடிக்கப்பட்ட கடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. அதனை வெற்றியடையச் செய்ய பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்.
அத்துடன், ஒரு நாடு என்ற வகையில் இதற்கு முன்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்றிருந்ததால், இம்முறை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட முறையில் கடன் வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு மிகவும் கடுமையான முயற்சிகளில் ஈடுபட வேண்டியிருந்தது. இதன் விளைவாக, 2027 ஆம் ஆண்டு வரை சர்வதேச நாணய நிதியத்துடன் நீடிக்கப்பட்ட கடன் ஒப்பந்தத்திற்குச் செல்ல முடிந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒப்பந்தத்தின் பின்னரே, நம் நாடு சுவாசிக்கத் தொடங்கியது எனலாம்.
அனைத்து விடயங்களிலும் தன்னிறைவு அடையாத நாடாக நாம் கண்டிப்பாக வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். அரசியல் ரீதியில் யார் தலைவராக இருந்தாலும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில் கொடுக்கல் வாங்கல்களைப் பேண முடியாது.இத்தகைய பரிவர்த்தனைகள் உலக விதிகளின்படி மட்டுமே நடக்க வேண்டும். நீடிக்கப்பட்ட கடன் வசதி ஒப்பந்தத்தின்படி, 2027 ஆம் ஆண்டு வரை கடன் ஒப்பந்தத்தில் ஈடுபட முடிந்துள்ளது. எனவே நாங்கள் வருடந்தோறும் பொருட்களை இறக்குமதி செய்ய முடியும்.
இன்னும் சில மாதங்களில், 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டால்தான் அரச ஊழியர்களின் சம்பளம், சிரேஷ்ட பிரஜைகளுக்கான ஓய்வூதியம், சமுர்த்தி, அஸ்வெசும என்பன ஏழைகளுக்கு வழங்கப்படும். மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இல்லாமல், வரவுசெலவுத்திட்டத்தை 2027 வரை தயாரிக்க முடியாது.
சர்வதேச நாணய நிதியம் 2025 வரவு செலவுத் திட்டத்திற்காக 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும். உலக வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஆசிய அபிவிருத்தி வங்கி 300 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வரவுசெலவுத் திட்டத்திற்காக வழங்குகிறது. வரவு செலவுத் திட்ட ஆவணம் தயாரிக்கும் போது மேலும் 3655 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் நிவாரணமாக கிடைக்கும் என நம்பப்படுகிறது. அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இவ்வாறுதான் தயாரிக்கப்பட வேண்டும். யார் ஆட்சி செய்தாலும் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், நிவாரணங்கள் போன்றவற்றுக்கு பணம் கண்டிப்பாகத் தேவை. இந்த முறையைத் தவிர, வரவுசெலவுத் திட்டத்திற்கான பணத்தைப் பெற வேறு வழியில்லை.
இந்த கடன் நிவாரணம் என்பது கணிப்புகள் மாத்திரமே. இந்த முன்னறிவிப்பு 2027 ஆம் ஆண்டுக்கும் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் உதாரணமாக, 2027 ஆம் ஆண்டுக்குள், வரவுசெலவுத் திட்டத்தில் பாரிய பற்றாக்குறை ஏற்படாவிட்டாலும், 3911 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதன்போது, நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் 629 அமெரிக்க டொலர்களும், சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 600 மில்லியன் அமெரிக்க டொலர்களும், உலக வங்கியிடமிருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வரவு செலவுத் திட்ட ஆவணத்தைத் தயாரிக்க வழங்கப்பட உள்ளது. 2027 வரவுசெலவுத்திட்டத்தைத் தயாரிப்பதற்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பற்றாக்குறை ஏற்படும். அந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட சர்வதேச சந்தைக்குச் செல்ல வேண்டும். தற்பொழுது யார் ஆட்சியில் இருந்தாலும், இலங்கையின் பிணைமுறிப் பத்திரங்களை உலகில் யாரும் வாங்க மாட்டார்கள். 2027 இல் தான் பிணைமுறிப் பத்திரங்களை வெளியிட முடியும். இந்த வகையில், 2027 ஆம் ஆண்டுக்குள் நமது நாட்டில் 14 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நியக் கையிருப்பு இருந்தால் மட்டுமே பிணைமுறிப் பத்திரங்கள் வெளியிட முடியும். தற்போது, 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே கையிருப்பில் உள்ளது.
எவ்வாறாயினும், ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு முறையான திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். இவ்வாறானதொரு வேலைத்திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தும் அதேவேளை, ஜனாதிபதி வெளிநாடுகளுடன் உடன்படிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இதில் எந்தவொரு ஒப்பந்தமும் வேலைத்திட்டமும் மறைக்கப்பட்டதல்ல. ஜனாதிபதி சகல தகவல்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
அந்தப் பின்னணியில், இந்த உருவாக்கப்பட்ட பொருளாதாரத் திட்டத்தைத் தவிர்த்து எவராலும் அரசாங்கத்தை நடத்த முடியாது. இந்தப் பொருளாதாரத் திட்டத்திற்குப் புறம்பாக யாராவது ஆட்சி செய்ய வேண்டும் என்று கனவு கண்டால், நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது என்பதைக் கூற வேண்டும்.
எனவே இந்த நாட்டை நேசிக்கும், எதிர்கால சந்ததிகளுக்காக ஒரு தேசமாக முன்னேறிய மற்றும் அபிவிருத்தி அடைந்த நாட்டில் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு இந்த இணக்கமான வேலைத்திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு நாடு என்ற ரீதியில் அனைவரின் ஆதரவும் தேவை. மேலும், நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படுவதை யாராவது எதிர்த்தால் அவர்கள் தேச துரோகிகளாக வரலாற்றில் பதியப்படுவார்கள் என்பதைக் கூற வேண்டும்” என்றும் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.