அசாமில் வெள்ளம் ; 46 பேர் பலி
அசாமில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பிரம்மபுத்ரா மற்றும் அதன் கிளை நதிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதுதவிர, திகவ், ஜியா-பராலி, பேகி, குஷியாரா உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ள நீர் அபாய அளவை கடந்து ஓடுகிறது. அசாமில் வெள்ள பாதிப்புக்கு நேற்று 8 பேர் உயிரிழந்தனர். இதனால், வெள்ளத்தில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
இதுபற்றி அசாம் பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்ட செய்தியில், 24 மணிநேரத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 46 ஆக உயர்ந்து உள்ளது. 3 பேர் காணாமல் போயுள்ளனர் என தெரிவித்து உள்ளது. 29 மாவட்டங்களை சேர்ந்த 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவற்றில் தூப்ரி மாவட்டத்தில் அதிக அளவாக, 2,23,210 பேரும், தர்ராங் மாவட்டத்தில் 1,83,738 பேரும், லகீம்பூர் மாவட்டத்தில் 1,66,063 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
105 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 2,800 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், 39 ஆயிரத்து 451 ஹெக்டேர் நிலங்கள் நீரால் சூழப்பட்டு உள்ளன. 11 லட்சத்து 20 ஆயிரத்து 165 விலங்குகளும் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டு உள்ளன. நேற்று ஒரே நாளில் 8,377 பேர் பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.