வீர வசனங்களை பேசாமல் தீர்வுகளை வழங்குங்கள்: பிள்ளையான் – சாணக்கியன் இடையே வாக்குவாதம்
வாகரை பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள இல்மனைட் அகழ்வு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன் மற்றும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று (29) மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் வாகரை பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள இல்மனைட் அகழ்வு தொடர்பில் இரா. சாணக்கியன் கருத்துக்களை முன்வைக்கும்போதே இவ்வாறு வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
வாகரை பகுதியில் இல்மனைட் அகழ்வு மற்றும் இறால் பண்ணை திட்டங்களுக்கு அனுமதி வழங்கவேண்டாம் என கோரி வாகரை பிரதேச மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
இதன்போது இவ்வாறான திட்டங்கள் பொருத்தமற்றவை என ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் திட்டங்கள் முன்னெடுக்கப்படுமானால் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
இதன் பிரகாரம் இன்றைய மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கருத்து வெளியிட்ட இரா. சாணக்கியன் மக்களுக்கு ஏற்புடைய வகையில் அமையாத எந்த ஒரு திட்டத்திற்கும் தாம் ஆதரவு வழங்க போவதில்லை என உறுதியளித்துள்ளார்.
மேலும், மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும், பொது இடங்களிலும் வீர வசனங்களை பேசாமல் உரிய தீர்வுகளை வழங்குவதே சிறந்த விடயமாக இருக்கும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த கூட்டம் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான்,இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா ஆகியோரின் இணைத்தலைமையிலும் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், அலிஸாஹீர் மௌலானா, சாணக்கியன், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் உட்பட பலர் திணைக்கள தலைவர்கள், கிழக்கு மாகாணசபையின் திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள்,திட்டமிடல் பணிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.