உலக சாதனை படைத்த சாமுத்திரிகா மேக்கப் ஸ்டூடியோ
கொழும்பு சாமுத்திரிகா மேக்கப் ஸ்டூடியோ அகாடமியின் ஏற்பாட்டிலும் MUA கிளப் லங்காவின் இணை அனுசரணையுடனும் இலங்கையின் பல மாவட்டங்களிலிருந்தும் முன்னணி ஒப்பனைக் கலைஞர்களும் பயிற்சி பெற்ற ஒப்பனைக் கலைஞர்களும் மொடலிங் துறையைச் சேர்ந்த கலைஞர்களும் ஒன்று சேர்ந்து உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இந்த உலக சாதனை நிகழ்வானது அண்மையில் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமான முறையில் நிகழ்த்தப்பட்டது.
சாமுத்ரிகா மேக்கப் ஸ்டுடியோ மற்றும் அகாடமியின் இயக்குநரான அனு குமரேசனின் தலைமையில் இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஐக்கிய இராச்சியம், கத்தார் மற்றும் இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்த 42 ஒப்பனை கலைஞர்கள் இணைய வழியூடாகவும், நேரடியாக இலங்கையின் பல மாவட்டங்களிலிருந்தும் முன்னணி ஒப்பனைக் கலைஞர்கள் 215 பேருமாக 18 நிமிட நேரத்தில் பல் வேறு வகையான கண் அலங்காரத்தை ஒரே தடவையில் செய்து முடித்துள்ளனர்.
“உலக சாதனை பதிவு நிறுவனங்கள் பலவற்றில் அனுசரணை பெற்ற” ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இந்தியா, வியட்நாம் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் அங்கீகாரம் பெற்ற “ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்” இன் சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.
இந்த உலக சாதனையானது இந்தியா, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், கம்போடியா, துபாய் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இதுவரை 1000-க்கும் மேற்பட்ட சாதனைகளை பதிவு செய்த அனுபவமுடைய, ஆசியா மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டுகளின் அதிகாரப்பூர்வ மூத்த நடுவர் “விவேக் ஆர் நாயர்” அவர்களின் நேரடி கண்காணிப்பில் நிகழ்த்தப்பட்டதுடன் www.asiabookofrecords.com/maximum-people-simultaneously-doing-eye-make-up-in-a-hybrid-mode/ என்ற இணைய முகவரியில்
ஆசியா மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டுகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்நிகழ்வில் விசேட அதிதிகளும் ஏனைய ஒப்பனைக் கலைஞர்களும், மாணவர்களும் என ஏராளமான பார்வையாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.