முதல் முறையாக ஆசியக் கிண்ணத்தை வென்றது இலங்கை மகளிர் அணி!
இந்தியாவுக்கு எதிரான மகளிர் ஆசியகிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை அணி முதல் முறையாக சம்பியன் கிண்ணத்தை வென்றது.
தம்புள்ளையில் நேற்று (28) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இதுவரை நடந்த எட்டுத் தொடர்களில் ஏழு முறை சம்பியனும் நடப்புச் சம்பியனுமான பலம்மிக்க இந்திய அணி 166 ஓட்டங்கள் என்ற சவாலான வெற்றி இலக்கை நிர்ணயித்தபோதும் இலங்கை
வீராங்கனைகளால் டி20 போட்டிகளில் தனது அதிகூடிய வெற்றி இலக்கை எட்ட முடிந்தது.
முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இந்திய அணிக்கு ஆரம்ப வீராங்கனை ஸ்மிரித்தி மந்தனா 47 பந்துகளில் 60 ஓட்டங்களை பெற்றதோடு மத்திய வரிசையில் ரிச் கோஷ் 14 பந்துகளில் 30 ஓட்டங்களை விளாசினார்.
இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த 165 ஓட்டங்களை பெற்றது.
பதிலெடுத்தாட வந்த இலங்கை அணி ஆரம்ப வீராங்கனை விஷ்மி
குணரத்னவை ஒரு ஓட்டத்துடன் இழந்தபோதும் இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்த சமரி மற்றும் ஹர்ஷிதா அதிரடியாக 87 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
இதன்போது அணித்தலைவி சமரி அத்தபத்து 43 பந்துகளில் 9 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 61 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார்.
என்றாலும் மறுமுனையில் ஆடிய ஹர்ஷிதா மூன்றாவது விக்கெட்டுக்கு கவிஷா தில்ஹாரியுடன் சேர்ந்து இலங்கை அணியை வெற்றி வரை அழைத்துச்
சென்றார்.
51 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஹர்ஷிதா 6 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன்
ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களை பெற்றார்.
மறுமுனையில் சிக்ஸர் ஒன்றை விளாசி இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்த தில்ஹாரி 16 பந்துகளில் ஆட்டமிழக்காது 30 ஓட்டங்களை பெற்றார்.
இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்களின் 2 விக்கெட்டு களை மாத்திரம் இழந்து 167 ஓட்டங்களை பெற்று வெற்றீயிட்டியது.