காசாவில் இருந்து இரவோடு இரவாக வெளியேறும் மக்கள் !
காசாவின் தெற்கு நகரான கான் யூனிஸில் இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவு விரிவுபடுத்தப்பட்ட நிலையில் அங்குள்ள மக்கள் செல் குண்டு வீச்சுகள் மற்றும் வெடிப்பு சத்தங்களுக்கு மத்தியில் இரவோடு இரவாக வெளியேற ஆரம்பித்துள்ளனர்.
கான் யூனிஸில் இருந்து காசாவில் ஆட்சியில் இருக்கும் ஹமாஸ் அமைப்பு ரொக்கெட் தாக்குதல்களை நடத்திய நிலையில் அந்தக் குழுவின் போராளிகளை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.
காசா நகரில் இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை நடத்திய வான் தாக்குதலில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது.
இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் கட்டளையகம் ஒன்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 19 போராளிகள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறியதை அந்த இரு அமைப்புகளும் நிராகரித்துள்ளன.
தெற்கில் கான் யூனிஸ் நகரின் மத்திய, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை உள்ளக்கியதாக இஸ்ரேலின் புதிய வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 11 மாதங்களாக நீடிக்கும் போரில் பெரும் பகுதியை உள்ளடக்கிய வெளியேற்ற உத்தரவாக இது உள்ளது.
நகரின் கிழக்கு பகுதிக்கு டாங்கிகள் திரும்பி இரு நாட்களின் பின்னரே இந்த உத்தரவு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எக்ஸ் சமூகதளத்திலும் குடியிருப்பாளர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் ஓடிய செய்தியாக இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
‘உங்களது சொந்த பாதுகாப்புக்காக புதியதாக உருவாக்கப்பட்ட மனிதாபிமான
வலயத்திற்கு உடன் வெளியேறிச் செல்லுங்கள். நீங்கள் இருக்கும் பகுதி அபாயகரமான போர் வலயமாக கருதப்படுகிறது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 30 ஹமாஸ் இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இதில் இராணுவ உட்கட்டமைப்புகள், டாங்கி எதிர்ப்பு ஏவுகணை வீசும் நிலைகள் மற்றும் ஆயுதக்களஞ்சிய வசதிகள் உள்ளங்குவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கான் யூனிஸின் கிழக்கு பகுதியில் முன்னேறிய இஸ்ரேலிய துருப்புகள் மீது தமதுபோராளிகள் மோட்டார் குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து நேற்று பின்னேரம் கான் யூனிஸின் மத்திய பகுதியில் உள்ள சந்தைக்கு அருகில் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது.
நகரின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களை அடுத்து அங்கு கறும்புகை வானை முட்டியது.
இரு அடுக்குமாடி கட்டடங்களை இஸ்ரேல் தாக்கியதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காசாவின் 2.3 மில்லிய மக்கள்தொகையில் அதிகப் பெரும்பான்மையானவர்கள்
தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதோடு அந்த குறுகிய நிலப்பகுதி பொரும்பாலும் இடிபாடுகளாக மாற்றப்பட்டுள்ளது.
காசாவின் எந்த இடமும் பாதுகாப்பானதாக இல்லை என்று பலஸ்தீன மற்றும் ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குடிமக்கள் அனுப்பப்பட்ட மேற்குக் கான் யூனிஸில் உள்ள அல் மவாசி போன்ற பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளும் இஸ்ரேலிய படைகளால் பல தடவைகள் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இஸ்ரேலின் உத்தரவை அடுத்து நேற்று முன்தினம் இரவில் ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகள் மற்றும் தற்காலிக முகாம்களில் இருந்து மேற்குப்பக்கமாக மவாசி மற்றும் வடக்கு பக்கமாக டெயிர் அல் பலாவை நோக்கி தப்பிச்செல்ல ஆரம்பித்தனர்.
இந்தப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் பெற்று நிரம்பி வழிகின்றனர்.
‘நாம் சோர்வடைந்துள்ளோம். நான் மற்றும் எனது குடும்பத்தினர் தற்காலிக முகாம்களில் இருந்து வெளியேறிச் செல்வது இது 10 ஆவது முறையாகும்’ என்று மேற்குக் கான் யூனிஸில் ஹமாத் வீட்டு தொகுதியில் இருந்து வெளியேறிய 28 வயது சக்கி முஹமது ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
‘மக்கள் தமது உடைமைகள் மற்றும் குழந்தைகளை சுமந்தபடி புதிய எதிர்பார்ப்புகள் மற்றும் அச்சத்திற்கு மத்தியில் தெரியாத இடங்களை நோக்கி ஓட்டம் பிடித்து வருகின்றனர்.
ஏனென்றால் இங்கு எந்த இடமும் பாதுகாப்பானதாக இல்லை’ என்று சாட் செயலி வழியாக பேசிய அவர் மேலும் குறிப்பிட்டார்.
‘நாம் மரணத்தில்இருந்து மரணத்தை நோக்கி ஓடி வருகிறோம்’ என்றார்.
இதேவேளை காசா போரில் மற்றொரு பயங்கரத் தாக்குதலாக கடந்த சனிக்கிழமை அதிகாலையில் காசா நகரில் உள்ள அல் தபீ சமயப் பாடசாலை மற்றும் பள்ளிவாசல் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்களை நடத்தியதை அடுத்து சடலங்கள் துண்டு துண்டாக சிதறிக்கப்பட்டுள்ளன.
எனினும் அண்மைய நாட்களில் இஸ்ரேலின் இவ்வாறான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
கடந்த ஜூலை 6 தொடக்கம் காசாவில் மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும்
குறைந்தது 16 பாடசாலைகள் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு இலக்காகி 280இற்கு
அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
‘பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் என அமைதியான மக்கள் வழக்கமான முறையில் அதிகாலை தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென்று அவர்கள் மீது ஏவுகணை ஒன்று விழுந்துள்ளது’ என்று தாக்குதல் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் வசித்து வந்த அபூ வசீம் என்பவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார்.
உடல்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு அவைகள் சிதைந்து காணப்படுவதாக அங்கிருக்கும் மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலையின் இரு மாடிகளே நேரடியாக இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் பேச்சாளர் மஹ்மூத் பசல் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுவர்கள் தங்கி இருந்த கட்டடத்தின் மேல் மாடி மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் தொழுவதற்கு பயன்படுத்திய தரைத்தளம் ஆகியவையே தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன என்று அவர் கூறினார்.
எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தை ஒன்றுக்கு
அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் ஆகிய மத்தியஸ்தம் வகிக்கும் நாடுகள் விடுத்த அழைப்புக்கு இஸ்ரேல் இணக்கத்தை வெளியிட்ட நிலையிலேயே இந்த பயங்கர தாக்குதலை அது நடத்தியுள்ளது.
இது பேச்சுவார்த்தையை மேலும் சிக்கலாக்கும் என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்தே காசாவில் போர் வெடித்ததோடு இதுவரை அங்கு கொல்லப்பட்ட
பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 40,000ஐ நெருங்கியுள்ளது.