தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழரை அந்நியப்படுத்தும் ; நாலக கொடஹேவா
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் போட்டியிடுவது தமிழர்களை அந்நியப்படுத்தும் செயல்பாடு என்று பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், ஜனாதிபதித் தேர்தல் என்பது முழு இலங்கைக்குமானதாகும். அதில் தமிழ் மக்கள் பங்காளிகளாக இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகரீதியான மரபாகும். ஆனால், தற்போது தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த முயற்சி நடைமுறைக்கு சாத்தியமற்றதாகும். தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் ஊடாக தமிழ் மக்கள் தமது ஆட்சி தலைமையை தெரிவு செய்யும் வாய்ப்பை
பெறமுடியாதவர்களாக உள்ளனர். இது அவர்களின் எதிர்காலத்துடன் சம்பந்தப்பட்ட விடயமாகும்.
என்னைப் பொறுத்தவரையில், தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துவது அந்த மக்களின் இறைமையாக இருந்தாலும் அந்த விடயம் தமிழ் மக்களுக்கு நன்மை பயப்பதாக
இருக்க வேண்டியது அமைய வேண்டும். தற்போதைய நிலையில் தென்னிலங்கையில் மூன்றுக்கும் அதிகமான போட்டிகள் அதிகரித்துள்ள நிலையில் தேசிய கட்சியுடன் பேரம்பேசல்களை செய்வதன் ஊடாகவே தங்களது உரிமைகளை நோக்கி நகரலாம் – என்றார்