மதுவரியை உயர்த்துவது தொடர்பான முன்மொழிவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

மதுவரியை உயர்த்துவது தொடர்பான முன்மொழிவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

மதுவரியை உயர்த்துவதற்கு நிதி அமைச்சு முன்வைத்த முன்மொழிவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் (06) கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.

காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயம்) 22ஆம் பிரிவின் கீழ் 2025/01 மதுவரி அறிவிப்பு, 1988ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் கட்டளை, 2000ஆம் ஆண்டின் 43ஆம் இலக்க ஒழுங்குமுறைப்படுத்தல் சட்டத்தின் 112ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதி என்பன இக்குழுவில் கலந்துரையாடப்பட்டன.

இதற்கமைய, 1989ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3வது பிரிவின் கீழான கட்டளை மற்றும் (52வது அத்தியாயம்) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழான 2025/01 மதுவரி அறிவிப்பு என்பனவும் குழுவில் கவனத்தில் எடுக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், 1989ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3வது பிரிவின் கீழான கட்டளையின் ஊடாக மோட்டார் வாகனம், சிகரெட், குளிர்பானம் மற்றும் புகையிலை உள்ளிட்ட ரூபாவின் பெறுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள உற்பத்தி வரியின் கீழ் சகல பொருட்களுக்கான உற்பத்தி வரியை 5.9% அதிகரிப்பதற்கு இடமளிக்கின்றது என்றனர். மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயம்) 22ஆம் பிரிவின் கீழ் 2025/01 மதுவரி அறிவிப்பு கீழ் மதுபானங்கள் மீதான மதுவரியை 5.9% இனால் அதிகரிக்க அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், உரிய தரவுகள் இல்லாமல் சிகரெட்டுகள் மீதான உற்பத்தி வரி அதிகரிக்கப்படுவதை அங்கீகரிக்க முடியாது என்றும், சிகரெட்டுகள் மீதான உற்பத்தி வரியை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிகரெட்டுக்களுக்கான வரியை அதிகரிப்பது தொடர்பில் நடத்தப்பட்ட மதிப்பாய்வுகளுக்கு அமைய, வரி அதிகரிப்பினால் அரசாங்கத்திற்குக் கிடைக்கும் வருமானம் அதிகரிக்காது என்றும், நிறுவனத்திற்குக் கிடைக்கும் வருமானமே அதிகரிக்கும் என்றும் கூறினார். இதற்கமைய, இந்த வரி அதிகரிப்பினால் அரசாங்கம் எவ்வாறு பயனடையும் என்பது குறித்த நியாயப்படுத்தல்களை அதிகாரிகள் குழுவுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அரசாங்க நிதி பற்றிய குழுவின் அடுத்த கூட்டத்தில் நிதி அமைச்சின் அதிகாரிகள் இது குறித்த விளக்கத்தை வழங்க வேண்டும் என்றும், 1988ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் கட்டளையை அன்றையதினம் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவும் குழு தீர்மானித்தது.

மேலும், (52வது அத்தியாயம்) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழான 2025/01 மதுவரி அறிவிப்பின் மூலம் மதுபானங்கள் மீதான மதுவரியை அதிகரிக்கும் முன்மொழிவு குழுவினால் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் கௌரவ உறுப்பினர்கள், இந்த வரி அதிகரிப்பின் மூலம் தனிநபர்கள் சட்டவிரோத மதுபானங்களைப் பயன்படுத்துவதற்கும் உற்பத்தி செய்வதற்கும் வாய்ப்புள்ளது என்பதை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இதற்கு பதிலளித்த அதிகாரிகள், சட்டவிரோத மதுபான உற்பத்தியைத் தடுப்பதற்கான சுற்றிவளைப்புக்கள் மற்றும் சோதனைகள் முறையாக நடத்தப்பட்டு வருவதாகக் கூறினர். இந்த ஆண்டின் கடந்த இரண்டு மாதங்களில், நாட்டில் மதுபான உற்பத்தி 22% அதிகரித்திருப்பதுடன் வருமானம் 23% அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தனர். சட்டவிரோத மதுபான பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் புதிய வகை மதுபானத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், 2000ஆம் ஆண்டின் 43ஆம் இலக்க ஒழுங்குமுறைப்படுத்தல் சட்டத்தின் 112ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதி என்பனவும் குழுவில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இதன் ஊடாக இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் (IRCSL) அதிகரித்த செலவுகளை ஈடுசெய்ய தவணைக் கட்டனத்தை காப்புறுதி நிறுவனங்களின் தலா எழுத்துமூல கட்டணத்தை 0.125% இலிருந்து 0.2% ஆக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பங்களில் இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு ஒழுங்குமுறை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளவில்லை என்ற உண்மையைத் தலைவர் குழுவில் முன்வைத்தார். MBSL நிதி நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் தொடர்பாக, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு தற்போதுள்ள சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதில் மெத்தனப் போக்கில் நடந்துகொண்டமை தொடர்பில் குழுவின் தலைவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அந்த நிறுவனத்தின் சார்பாக எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து குழுவிற்குத் தெரிவிக்குமாறும் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மூன்றாம் தரப்பு காப்புறுதித்திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட ஈட்டுத்தொகையைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மூன்றாம் தரப்பு காப்புறுதித் திட்டத்தைக் கொண்டவர்களுக்கு விபத்து ஏற்பட்டால் அதற்கான ஈட்டுத்தொகையை எளிதாகப் பெறும் வகையில் விதிமுறைகள் வகுக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தப்பட்டது. நாட்டில் காப்புறுதியை ஒரு தொழிலாக வளர்ப்பதற்கு, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு எதிர்காலத்திற்கான திட்டத்தைத் தயாரித்து முன்வைக்க வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.

காப்புறுதி நிறுவனங்களில் வைப்புச் செய்யப்பட்ட பணத்தை வங்கிகளின் ஊடாக அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் தலைவர் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். இது தொடர்பில் போதியளவு காலத்தைப் பெற்று சம்பந்தப்பட்ட கைத்தொழில் நிறுவனத்துடன் கலந்துரையாடி ஒழுங்குவிதிகளைத் தயாரிக்குமாறு இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

சூதாட்ட வரி குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. பௌதீக ரீதியாகக் காணப்படும் சூதாட்ட விடுதிகளில் வரி அறவிடப்பட்டாலும், அதிக எண்ணிக்கையான சூதாட்ட வணிகங்கள் ஒன்லைன் மூலம் மேற்கொள்ளப்படுவதாகக் குழுவின் தலைவர் தெரிவித்தார். அதன்படி, ஒன்லைன் சூதாட்ட வணிகங்கள் மூலம் எவ்வித வரியும் வசூலிக்கப்படவில்லை என்பதை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து, இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். இதற்காக சூதாட்ட அதிகாரசபையை நிறுவுவதற்கு இந்தக் குழு பல ஆண்டுகளாக முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்ட தலைவர், இதற்கான சட்டமூலத்தை விரைவில் பூர்த்தி செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவிப்பதாகவும் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான (கலாநிதி) ஹர்ஷன சூரியப்பெரும, சதுரங்க அபேசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)