சவால்களைக் கண்டு தப்பியோடிய சஜித்தும், அனுரவும் மக்களின் கஷ்டங்கள் பற்றி பேசுவது வேடிக்கையானது !
“இயலும் ஸ்ரீலங்கா” தேர்தல் மேடையானது நாட்டை பிரிக்கும் இடமல்ல. மாறாக அனைவரும் ஒன்றிணைவதற்கான மேடையென தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதே தனது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நேற்று (17) நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ பொதுக்கூட்டத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்படும் தொடர் பொதுக்கூட்டத்தின் முதலாவது பேரணி அனுராதபுரத்தில் ஆரம்பமானது.
இந்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியவர்கள் சஜித் பிரேமதாசவோ, அனுர திஸாநாயக்கவோ, ஹர்ஷ டி சில்வாவோ, சுனில் ஹந்துன்நெத்தியோ அல்ல என்று தெரிவித்த ஜனாதிபதி, தமது அரசாங்கம் போதியளவு உரங்களை வழங்கிய போது, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வெற்றிகரமான அறுவடையை வழங்கிய விவசாயிகளே, இந்நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றியதாக நினைவு கூர்ந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், அனுர திஸாநாயக்கவும் இன்று மேடைகளில் மக்களின் சுமைகளைப் பற்றி பேசுவது வேடிக்கையானது எனவும், உண்மையில் மக்கள் படும் துன்பம் அவர்களுக்குத் தெரிந்திருந்தால் ஆட்சி அதிகாரத்தைப் பெற்று, மக்களின் பிரச்சினைகளுக்கு அன்றே தீர்வு வழங்கியிருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அன்று கேஸ் சிலிண்டர் 6800 ரூபாவிற்கு சென்ற போது சஜித் பிரேமதாசவும் அநுர திஸாநாயக்கவும் எங்கே இருந்தார்கள் என்று கேள்வி எழுப்பிய ஜனாதிபதி, இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாவிட்டால் இந்த மேடையில் வந்து அமர்ந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“கட்சிகளை உடைப்பதற்காக நாம் இன்று ஒன்று கூடவில்லை. கட்சிகள் ஒன்றுகூடி நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வந்துள்ளோம். எம்மை ஆசீர்வதிக்கவே மழையும் பெய்தது. அதனால் கட்சி பேதமின்றி சுயாதீனமாக சிலிண்டர் சின்னத்தில் போட்டிடுகிறேன்.
மற்றைய தலைவர்கள் ஓடிப்போன வேளையில், முடியும் என்று நாட்டை மீட்க வந்தவர்கள் எம்மோடு உள்ளனர். அதனால் எனது அணியில் அனைவரும் ஒன்றுபட்டு முன்னோக்கிச் சென்று எதிர்காலத்தைப் பாதுகாப்போம். என்னுடையதோ பிரதமருடையதோ எதிர்காலம் இங்கு பாதுகாக்கப்படாது.
கடந்த காலத்தை மறந்துவிடக் கூடாது. அன்று நாட்டில் மின்சாரம் இருக்கவில்லை, இருளில் இருந்தோம். எரிபொருள் இருக்கவில்லை, நடந்து சென்றோம். கேஸ் இருக்கவில்லை, சிலிண்டர் மட்டுமே இருந்தது, அதையும் விற்றோம். மருந்து இருக்கவில்லை, மக்கள் வீதிகளில் உயிரிழந்தனர். ஹோட்டல்கள் மூடப்பட்டன, தொழிற்சாலைகள் முடங்கின. அப்போது நானும் பிரதமரும் மட்டுமே நாட்டை ஏற்க முன்வந்தோம்.
முன்னாள் ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகினர். எதிர்கட்சித் தலைவர் ஓடிவிட்டார். அனுரவைத் தேடவே முடியவில்லை. டொலரின் பெறுமதி 370 ரூபாயாக உயர்ந்தது. கேஸ் சிலிண்டர் ரூ.4900 வரை அதிகரித்தது. பெற்றோல் ஒக்டேன்-92 இன் விலை ரூ.470 வரையில் அதிகரித்தது. ஒடோ டீசல் ரூ.460 வரையில் அதிகரித்தது. மண்ணெண்ணெய் விலை ரூ.460 வரையில் அதிகரித்தது. பஸ் கட்டணமும் மின் கட்டணமும் அதிகரித்தது. மக்கள் கடுமையாகத் துன்பப்பட்டனர். அப்போது சஜித்தும், அனுரவும் எங்கு இருந்தனர்?
மக்கள் கஷ்டம் புரிந்திருந்தால் ஆட்சியை ஏற்றிருக்க வேண்டும். எதிர்கட்சி எந்த வேளையிலும் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கத் தயாராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இரண்டாம் எதிர்கட்சி ஏற்க வேண்டும். அவர்கள் எங்கு இருந்தனர்? கேஸ் சிலிண்டர் விலை ரூ.4900 இற்கு கூடியபோது அனுர, சஜித் எங்கு இருந்தனர்? இந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும்.
இன்று அனுராதபுரத்தில் ஆரம்பித்து சஜித், அனுரவிடம் இந்தக் கேள்விகளை எல்லா மேடைகளிலும் கேட்பேன். பதில் இருந்தால் கூறுங்கள், இல்லாவிட்டால் எனது மேடையில் இரு பக்கங்களில் வந்து அமருங்கள்.
அன்று உயர்வடைந்த சிலிண்டர் விலை இன்று குறைந்துள்ளது. அதனால் சிலிண்டர் சின்னத்தை ஏற்றுக்கொண்டேன். பெற்றோல் டீசல் விலைளையும் குறைத்துள்ளோம். பஸ் கட்டணமும் மின் கட்டணமும் குறைந்துள்ளன. இதனால் மட்டும் திருப்தியடைய முடியாது. இது ஆரம்பம் மட்டுமே. இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. நாட்டில் உரம் இருக்கவேயில்லை. இந்தப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப சஜித்தோ அனுரவோ ஹர்ஷவோ ஹந்துன்னெத்தியோ அன்று முன்வரவில்லை. நான் உரம் பெற்றுத் தந்தேன், நீங்கள் விளைச்சலைத் தந்தீர்கள், நாம் வெற்றி கொண்டோம்!
இதற்கு மக்களுக்கு நன்றி! நான் இந்த நாட்டை கட்டியெழுப்புவேன். VAT வரி அதிகரிக்கப்பட்டபோது மக்கள் பட்ட கஷ்டங்களை நான் அறிவேன். கஷ்டப்பட்ட அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கினோம். அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 55 ஆயிரம் வரையில் அதிகரித்தோம். வங்குரோத்து நாட்டிலேயே அதனைச் செய்தோம்.
அஸ்வெசும வழங்கினோம், சமுர்த்தி போன்று மூன்று மடங்கு வழங்கினோம். சிரேஷ்ட பிரஜைகளுக்கு நிவாரணம் வழங்கினோம். அங்கவீனமுற்றோருக்கு நிவாரணம் வழங்கினோம். ஜனாதிபதி நிதியத்தில் புலமைப்பரிசில் வழங்கினோம். உறுமய திட்டத்தில் காணி உறுதிகள் வழங்கினோம். தற்காலிகமான உறுமய திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பின்னர் தனி அதிகார சபையின் கீழ் இரு வருடங்களில் இந்தத் திட்டத்தை நடத்தி முடிப்போம், அதற்கான சட்டமும் கொண்டு வரப்படும். கொழும்பில் வீட்டு உரிமைகளை மக்களுக்கு வழங்குகிறோம். தோட்டப் பகுதிகளை கிராமங்களாக பிரகடனப்படுத்த முயற்சிகளை மேற்கொள்கிறோம்.
உரிமைகளைப் பகிர்வதே புரட்சியாகும். 18 நாடுகள் எமக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக உதவிகளை வழங்கின. நாம் முன்னேற்றத்தை எட்டினால் சர்வதேச நாணய நிதியம் 13 பில்லியன் டொலர் நிவாரணம் வழங்குவதாகக் கூறியுள்ளது. எனவே அதற்கான வேலைத்திட்டத்தை தொடர வேண்டும். அனுரவும் சஜித்தும் அதனை மாற்றுவதாகக் கூறுகிறார்கள். அதனை மாற்றிவிட்டு மீண்டும் அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்து மின்சாரம் இன்றி இருக்க வேண்டுமா? இல்லாவிட்டால் அப்படியான பிரச்சினைகள் வரும்போது அதனைத் தீர்மானிக்க முடியாமல் ஓடி விடுவார்களா?
நான்கு வருடங்கள் தொழில் கிடைக்காத இளையோருக்கு தொழில் வழங்கும் திட்டமும் எம்மிடம் உள்ளது. அதற்காக விவசாய நவீனமயப்படுத்தல் திட்டம் ஆரம்பிக்கப்படும், தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படும். ஜே.ஆர்.ஜயவர்தன காலத்தில் கலாசார முக்கோணத்தை அமைத்து தம்புள்ளை, சீகிரிய பகுதிகளில் அபிவிருத்தியை ஏற்படுத்தினோம். அதேபோல் அனுராதபுரத்தை மேம்படுத்த எதிர்பார்க்கிறோம். அனுராதபுரத்தை பௌத்த மத்தியஸ்தானமாக மாற்றியமைக்க எதிர்பார்க்கிறோம். அதற்காக மகா விகாரை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும்.
நாம் முன்னேறிச் செல்வோம். உங்கள் எதிர்காலத்தை எம்மிடம் விட்டுவிடுங்கள், சிலிண்டருக்கு வாக்களியுங்கள்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன:
“அனுராதபுரம் மக்கள் ஆழமாகத் தீர்மானித்தே வாக்களித்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஆட்சி வழங்கப்பட்டபோது நீண்ட காலம் பயணிக்க முடியாதென எதிர்கட்சிகள் கூறின. ஆனால் நாம் இன்றைய நிலைமை வரையில் கொண்டு வந்திருக்கிறோம்.
நாட்டில் பொருளாதார நிலைத்தன்மை அவசியம். நாட்டில் அராஜக முறையில் அரசியல் செய்ய முடியாது. அகிம்சை வழியில் சென்று வெற்றி கொள்ள முடியும் என்பதை ஜனாதிபதி நிரூபித்துள்ளார். அரச தலைவர் ஒருவரிடம் நாடு கையளிக்கப்படும்போது அவருக்கு நாட்டை நிர்வகிக்கும் இயலுமை இருக்க வேண்டும்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அனுபவங்களைக் கொண்டு நாட்டைப் பொறுப்பேற்று முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தி நம்பிக்கையை வழங்கியுள்ளார். கிராமங்களிலுள்ள இளையோரின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான திட்டத்தையும் ஜனாதிபதி தயார்படுத்தியுள்ளார்.
அதனால் ஜனாபதி வழங்கிய தலைமைத்துவத்தை தொடர்ந்தும் பாதுகாத்தால் அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்க முடியும்.” என்று பிரதமர் தெரிவித்தார்.
கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா:
“கடந்த காலத்தில் எதிர்கொண்ட பிரச்சினைகளிலிருந்து பொருளாதார வீழ்ச்சியிருந்து எழுச்சியை நோக்கிக் கொண்டு வந்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. அவ்வாறான ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே. அதனால் அவருடன் சேர்ந்து பயணிக்க வேண்டியது அவசியம். நாட்டுக்கு இனி நல்ல காலம் பிறகும் என்று நம்புவோம்.” என்றார்.
துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா:
“நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய வேலைத்திட்டம் இருக்கும் தலைவருக்கே நாம் ஆதரவளிக்கிறோம். அப்படிப்பட்ட தலைவரை சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.
அதேபோல் வாக்குறுதி அரசியலுக்கும் நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சிலர் தமது புதல்வர்களை அரசர்களாக்க முயற்சிக்கின்றனர். ஆனால் நாட்டை மீட்ட தலைவருக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
நாட்டில் 80 சதவீதமான தரப்புக்கள் தற்போதும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்த்துக் கொண்டுள்ளனர்.” என்று அவர் தெரிவித்தார்.
நீதி மற்றும் வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி:
“கொவிட், உக்ரேன் யுத்தம் காரணமாக எம்மால் எதிர்பார்த்த பொருளாதார இலக்குகளை அடைய முடியவில்லை. பெரும் சரிவைச் சந்தித்தோம். 69 இலட்சம் பேருடைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியாமல் போனது.
பல மணித்தியால மின்வெட்டு. 2022 ஏப்ரல் 4 ஆம் திகதி எவரும் நிதியமைச்சை ஏற்காத வேலையில் நான் ஏற்றுக்கொண்டேன். அப்போது அனைத்து கட்சிகளும் எமக்கு ஒத்துழைக்க வேண்டுமெனக் கோரினோம்.
நான் நிதியமைச்சராக இருந்தபோது, அப்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சிகளுக்கு நாட்டை ஏற்க அழைப்பு விடுத்தார். நான் சஜித்துடன் பேசியபோது அவர் ஹர்ஷ எம்பியுடன் பேசுமாறு கூறினார். அவர் மத்திய வங்கி ஆளுநரையும் நிதியமைச்சின் செயலாரையும் அனுப்புமாறு கூறினார். அதனையும் செய்தோம். எதிர்கட்சித் தலைமையகத்தில் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக அவர்களுக்கு விளக்கமளித்த பின்பு, நாட்டின் நிலைமை மோசமாக உள்ளதெனக் கூறிவிட்டு ஒதுங்கிவிட்டனர். அவர்கள் ஏற்க மறுத்த நாட்டைதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்று இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.
அதனால் அந்த நிலையிலிருந்து மீட்டெடுத்த தலைவருக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. நாம் ஒருபோதும் ஐக்கிய தேசிய கட்சியின் மேடையில் ஏறியதில்லை. தற்போது நாட்டின் நலன் கருதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கிறோம்.
நாடு நெருக்கடியிலிருந்தபோது பொருளாதாரத்தை மீட்க முன்வராதவர்கள் இப்போது வருவதில் என்ன பலன் இருக்கிறது? நாட்டின் தேசிய பாதுகாப்பு என்பது நிலப் பாதுகாப்பு மாத்திரம் அல்ல தேசியப் பொருளாதாரம் சரிந்தால் முழு நாடும் சரிந்துவிடும். எனவே லெபனான், வெனிசுலா போன்ற நிலைக்கு இலங்கை செல்லாதிருக்கப் பாடுபட்ட ஜனாதிபதிக்கு நாம் நன்றிக்கடன் செலுத்த வேண்டும்.” என்றார்.
அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி:
“ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியதில்லை. ஆனால் இம்முறை கட்சி, நிற, இன பேதமின்றி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க அணிதிரண்டுள்ளோம். மக்கள் குறித்தும், நாடு குறித்தும் சிந்திக்கும் அனைவரும் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தத் தீர்மானித்துவிட்டனர்.
நாடு மிகவும் பாதாளத்தில் விழுந்தது. பல மைல் தூரம் கேஸ் வரிசை இருந்தது. பல மைல் தூரம் எரிபொருள் வரிசை இருந்தது. மின்சாரம் தடைப்பட்டிருந்தது. பஞ்சம் வரும் என்றும் மக்கள் அஞ்சினார்கள். இருந்த ஜனாதிபதி தப்பியோடினார். எதிர்க்கட்சித் தலைவர் ஒளிந்துகொண்டார். நாடு நிர்க்கதிக்குள்ளானது. ‘அரகலய’ போராட்டத்திற்குச் சென்றபோது எதிர்க்கட்சித் தலைவரை விரட்டி விரட்டி அடித்ததைப் போல் மீண்டும் விரட்டியடித்து விடுவர் என்ற அச்சத்திலேயே அவர் நாட்டை பொறுப்பேற்க முன்வரவில்லை.” என்று அவர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் பீ.ஹரிசன்:
“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு நாட்டு மக்கள் அனைவரும் கைகோர்த்துள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு மக்கள் கஷ்டப்பட்டனர். உரம் தேடி அலைந்தனர். எரிபொருள் தேடி அலைந்தனர். பிள்ளைகள் பசியில் வாடியபோது வரிசையிலிருந்த மக்கள் ஒரேயொரு கோரிக்கையை மட்டுமே முன்வைத்தனர்.
அந்த நேரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைகளுக்கு ஆட்சி அதிகாரம் சென்றதாலேயே இன்றைய நிலையை அடைந்திருக்கிறோம். எனவே எமக்கு மூச்சுவிட இடம்கொடுத்த தலைவருக்கு இடமளிக்க வேண்டியது நாட்டு மக்களின் பொறுப்பாகும்.
பல நெருக்கடிகள் இருக்கும் போதும் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கினார். தட்டுப்பாடின்றி அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வழி செய்தார். அதனால் மீண்டும் தலைமைத்துவங்களை பரீட்சிக்க வேண்டிய அவசியமில்லை. உலகத் தலைவர்களும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஏற்றுக்கொண்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ:
“இந்த நாட்டை கட்டியெழுப்புவது பெரிய காரியம் அல்லவென சிலர் கூறுகிறார்கள். ஐந்து வருடத்தில் இந்தியாவை மிஞ்சிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதாகக் கூறும் தலைவர்கள் நாட்டில் நெருக்கடி வந்த காலத்தில் எங்கிருந்தனர்?
இப்போது இலங்கையில் பல சூப்பர் மேன்கள் உள்ளனர். ஆனால் இலங்கையின் “வன் மேன்” என்று ரணில் விக்ரமசிங்கவை மட்டுமே சொல்ல முடியும். அனைத்து மக்களையும் ஒன்றுபடுத்திய தலைவராகவும் அவரே உள்ளார். நாடும் நாட்டு மக்களின் பிள்ளைகளும் முன்னேறும் அதேநேரம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நினைத்தால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் அவசியமானது.
சிலிண்டர் பற்றி பலரும் பல விடயங்களைக் கூறுகிறார்கள். ஆனால் அதனை மிஞ்சிய சின்னம் கிடைக்காது. அதனைக் கண்டவுடன் கடந்த இரு வருடங்களில் பட்ட கஷ்டங்கள் நினைவில் வர வேண்டும். பசியில் வாடிய மக்களுக்கு உணவு கிடைக்க வழி செய்த தலைவர் ரணில் விக்ரமசிங்க என்பதை மக்கள் மறக்கக் கூடாது.
சஜித் பிரமேதாசவின் சின்னம் பழைய தொலைபேசி. இலங்கைக்கு புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தையும் அறிமுகப்படுத்தியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. இன்று திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடுவோர் திசைகாட்டியை இயக்கவும் ரணில் விக்ரமசிங்க இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்திய இணைய வசதி தேவை என்பதை மறந்துவிடக்கூடாது” என்று அவர் வலியுறுத்தினார்.
முன்னாள் அமைச்சர் மனுச நாணயக்கார:
“நாட்டையும், இனத்தையும் காப்பதைப் போன்றே நாம் எம்மை முதலில் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இதற்கான இறுதிச் சந்தர்ப்பமே இது. மக்களைக் காப்பாற்ற கட்சி பேதமின்றி, இங்கு ஏராளமானோர் ரணில் விக்ரமசிங்கவுடன் கூடியுள்ளனர். நாடு பற்றியெரிந்தபோது பல தலைவர்கள் தப்பியோடினார்கள். மக்கள் செத்து மடிவதையும், பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாவதையும் பார்த்துக் கொண்டிருக்க முடியாமல்தான் ரணில் விக்ரமசிங்க இந்தப் பொறுப்பை ஏற்றார்.
இதனை மீட்டெடுக்க முடியாது என்று எதிர்க்கட்சியில் உள்ள பொருளாதார நிபுணர்கள் கூறினார்கள். ஆனால் அந்தச் சவாலை ஏற்ற ஜனாதிபதி அதனை செய்து காண்பித்துள்ளார். சிங்கம் தனியாகவே வரும். அதேபோல் ரணில் விக்ரமசிங்கவும் தனியாகவே இதனைப் பொறுப்பேற்றார். அதன்பின்னர் அனைத்துக் கட்சிக்காரர்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். இன்று அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து நாட்டைக் கட்டியெழுப்பி வருகிறார்.
மோசடியாளர்கள், பொருளாதாரத்தை நசுக்கியவர்கள் குறித்து அதிகமாகப் பேசப்படுகிறது. ஆனால் அவ்வாறானவர்கள் யாரும் எமது மேடையில் இல்லை. பொருளாதாரத்தை நசுக்கியவர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஜீ.எல்.பீரிஸ், டளஸ் அழகப்பெரும ஆகியோர் இன்று சஜித் கூட்டணியில் இருக்கின்றனர். அத்துடன், மோசடியாளர்கள் ஆட்சிபீடம் ஏறுவதற்கு 2005ஆம் ஆண்டு உதவிய அநுரகுமார திஸாநாயக்க இன்று மோசடியாளர்கள் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். 69 லட்சம் வாக்குகளை கோட்டாபய ராஜபக்ச எடுத்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி 57 லட்சம் வாக்குகளை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெற்றது. பிரிந்துசென்று பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாச 27 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றார். இந்த 27 லட்சம் வாக்குகளைப் பெற்றபோது இருந்த அநேகர் தற்போது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குகின்றனர். இன்னும் சில நாட்களில் இன்னும் ஐந்தாறு பேர் எங்களுடன் இணையவுள்ளனர். ரவூப் ஹக்கீம் குறித்துப் பேசுவதில் பயனில்லை. அந்தக் கட்சியில் உள்ள ஏராளமானோர் எம்முடன் இருக்கின்றனர். தலையும், உடலும் எங்களுடன் இருக்கிறது.
முடியாது என்று கூறிய சஜித் பிரேமதாசவுடன் இருப்பதில் எந்த பயனும் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுக்குக் கூறுகிறேன். ரணில் விக்ரமசிங்கவினால் மட்டுமே இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்பதால் அனைத்து ஐக்கிய தேசியக் கட்சியினரையும் எம்முடன் இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா:
“முப்பது வருடங்களுக்கு முன்னர் இந்த நாடு எங்கே இருந்தது என்று பாருங்கள். உலகம் முழுவதும் கொவிட் பரவல் காரணமாக சர்வதேச வர்த்தகம் சரிந்தது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வரும்போது இந்த நாடு இருந்த நிலை நினைவிருக்கும்.
ஆனால் இரண்டே ஆண்டுகளில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முடிந்தது. இன்று 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஆனால் இந்த நாடு வங்குரோத்தானபோது எந்தத் தலைவனும் இந்த நாட்டைப் பொறுப்பேற்க முன்வரவில்லை. இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனுபவம் கொண்ட ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே” என்று தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான்:
“நாடு நெருக்கடியிலிருந்த நேரத்தில் நிபந்தனையின்றி நாட்டை மீட்க வந்தீர்கள். அதனால் மீண்டும் ஜனாதிபதிக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும். நாட்டின் மீது பற்று உள்ளவர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும்.
இந்த முறை சரியான தீர்வை எடுக்க முடியாமல் போனால் நாடு நெருக்கடிக்குச் செல்லும். பங்களாதேஷின் நிலையைப் பார்த்தால் தெரியும். சிங்கப்பூர், மலேசியா போன்று இலங்கையைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அனைத்து இன மக்களும் நிம்மதியாக வாழ வழி செய்யக் கூடியவர், பலஸ்தீனத்திற்காகக் குரல் கொடுத்த தலைவரும் அவரேயாவார். எனவே நாட்டின் முஸ்லிம் மக்கள் அது பற்றி சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன:
2022ஆம் ஆண்டில் நாடு விழுந்தது. ஜனாதிபதி ஓடிவிட்டார். பிரதமர் ஓடிவிட்டார். நிதியமைச்சர் தப்பியோடினார். யாரும் இதனைப் பொறுப்பேற்க முன்வரவில்லை. எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் நிதியமைச்சின் செயலாளர், மத்திய வங்கி ஆளுநர் ஆகியோரை அழைத்து பேச்சு நடத்தினர்.
அதன்போது இதில் தலையிட வேண்டாம் என்று சஜித் பிரேமதாசவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதனை ஒரு அதிசக்தி வாய்ந்த நபரினால் மட்டுமே மீட்டெடுக்க முடியும் என்று ஹர்ஷா சில்வா கூறினார். ரணில் விக்ரமசிங்க இதனை மீட்டெடுத்தார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அநுர குமார திசாநாயக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பொறுப்பேற்க முடியாது என்று அவர் கூறிவிட்டார்.
எரிபொருள், கேஸ் உள்ளிட்ட அனைத்து வரிசைகளிலும் நீங்கள் காத்திருந்த அனுபவம் உங்களுக்கு இருக்கும். இதனை சரிசெய்ய யாரும் முன்வரவில்லை. ஆனால் பாராளுமன்றத்தில் தனி மனிதராக ஒருவர் இருந்தார். அதுதான் ரணில் விக்ரமசிங்க. அந்த நபர் பதவியை ஏற்று வெளியே வரும்போது ஊடகங்கள் கேள்விகளை எழுப்பின.
மிகவும் சிரமமான பணி, ஆனால் இதனை நான் செய்து முடிப்பேன் என்று ரணில் விக்ரமசிங்க கூறினார். அவ்வாறே செய்துகாட்டினார். அவர் இன்று தேர்தலில் போட்டியிடுகிறார். அன்று பொருட்களின் விலை விண்ணைத் தொட்டது. அது தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திறைசேரி காலியாகியிருந்தது. ரணில் விக்ரமசிங்கவிடம் வெற்றுப் பாத்திரமே கையளிக்கப்பட்டது. தற்போது பொருளாதாரம் வளர ஆரம்பித்துள்ளது.
கிரேக்கத்தின் பொருளாதாரம் விழுந்தபோது அங்கு என்ன நடந்தது? அரச ஊழியர்களின் சம்பளம் 20 வீதம் வரை குறைக்கப்பட்டது. ஆனால் இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பளம் வெட்டப்படவில்லை. இது ஆச்சரியமான விடயம். அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் அவர்கள் வந்தார். வங்குரோத்து அடைந்த நாடொன்றுக்கு வந்திருக்கிறேன் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று தெரிவித்தார். மக்கள் வாழ்க்கை வழமைக்குத் திரும்பியிருந்தது. மக்கள் பொழுதுபோக்கில் ஈடுபட்டனர். இதனை தன்னால் நம்ப முடியவில்லை என்று ஸ்கொட் மொரிசன் கூறினார்.
உலகம் இவரைப் பாராட்டுகிறது. உள்நாட்டில் திட்டித் தீர்க்கின்றனர். உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். மீண்டும் விளையாட வேண்டாம். ஏற்கனவே விளையாடி பட்டபாடு உங்களுக்குத் தெரியும். இரவில் விழுந்த குழியில் பகலில் விழ வேண்டாம். ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு யார் வந்தாலும் நாடு மீண்டும் ஆபத்தில் விழும். எமது நிபந்தனைகளை உடைத்தால் மீண்டும் விழ நேரிடும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியிருக்கிறது. கிரேக்கத்தில் இதுவே நடந்தது. எனவே உங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம்.
ரணில் விக்ரமசிங்கவிடம் நாட்டை ஒப்படையுங்கள். 2025ஆம் ஆண்டு இந்த நிலைமையை மேலும் மேம்படுத்த வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து இதுவரை 14 பேர் வந்துள்ளனர். இன்னும் முடியவில்லை. இன்னும் வருகிறார்கள். 21ஆம் திகதி இரவு தேர்தல் முடிவுகளின்படி ரணில் விக்ரமசிங்க இலங்கை வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார்” என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன:
உரம், எரிபொருள் இல்லாது தடுமாறியபோது அவற்றை வழங்கினார். கேஸ் இல்லாதபோது அதனைப் பெற்றுத் தந்தார். இன்று அதுவே அவரது சின்னமாகும். மின்சாரம் தடைப்பட்டபோது மின்சாரத்தை வழங்கினார். சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்துத் தரப்பினரையும் தன்னுடன் இணைத்துக் கொண்டார். தனியொருவராகவே ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியினர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர், மொட்டுக் கட்சியினர் என அனைவரும் இங்கு கூடியுள்ளனர். மழை பெய்துகொண்டிருந்தாலும் மக்கள் காத்திருக்கின்றனர்.
அநுராதபுரம் விவசாயத்திற்கு பெயர்பெற்றது. இவர்களுக்கு இன்னும் உரத்தின் விலையைக் குறைத்து நீர்ப்பாசனத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். இந்தப் பணிகளை 21ஆம் திகதி நீங்கள் ஜனாதிபதியான பின்னர் செய்வீர்கள்.
மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் தலைவர் அல்ல அவர். அஸ்வெசும, உறுமய, மாணவருக்கு புலமைப்பரிசில் வழங்குவதாக ஜனாதிபதி வாக்குறுதியளிக்கவில்லை. ஆனால் அவற்றை செய்து முடித்தார். ஜனாதிபதி மிகச் சிறந்த நிர்வாகி. அரசாங்கத்தை சரியாக நிர்வகித்தார். பொருளாதாத்தை சிறப்பாக நிர்வகித்தார். விழுந்த நாட்டை இரண்டு வருடத்தில் கட்டியெழுப்பினார். மேலும் ஐந்து வருடங்கள் நாட்டை ஒப்படைத்தால் நிச்சயம் நாட்டை சிறந்த நிலைக்கு உயர்த்துவார் என்பதை அறிவோம்” என்றார்.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க:
“நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஜனாதிபதி ஏற்ற வேளையில் அத்தியாவசிய பொருட்கள் ஒன்றும் மக்களுக்கு கிடைக்கவில்லை. இரண்டு வருடங்களில் ஜனாதிபதி அந்த நிலைக்குத் தீர்வு கண்டுள்ளார். எதிர்கட்சி எம்.பி ஹர்ஷ இந்த நாட்டின் பொருளாதார சவால்ளை வெற்றிகொள்ள முடியாது என்று கூறினார். ஆனால், இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதனை வென்று காட்டியிருக்கிறார் என்பதை எதிர்கட்சிக்கு நினைவுபடுத்துகிறேன். சஜித்தும் அனுரவும் பயந்தோடிய வேளையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நாட்டைப் பொறுப்பேற்றார். அப்போது சவாலை வெல்லக் கூடியவர்கள் மட்டுமே ஜனாதிபதியுடன் இருந்தோம்.
அடுத்த வருடத்தில் 25 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கத் தீர்மானித்துள்ளோம். அதனைச் செய்ய முடிந்த ஒரே தலைவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே. எதிர்கட்சிகளால் அதனைச் செய்ய முடியுமா என்பதை கூறவேண்டும். அவர்களிடம் நாட்டை முன்னேற்றுவதற்கான எந்த திட்டமும் இல்லை” என்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுர மாவட்டத் தலைவர், வடமத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க:
“இலங்கையின் முதலாம் இராச்சியத்தில் இருந்து இன்று ஆரம்பிக்கும் இந்த நிகழ்வு ஒரு வரலாற்று சிறப்புமிக்க விடயம் என்பதைக் கூற வேண்டும். இந்த நாடு சுபீட்சமான யுகத்திற்கு பிரவேசிப்பதற்கான ஆரம்பத்தையே இந்த நிகழ்வு குறிக்கிறது. எமது நாட்டில் உள்ள புத்திசாலியான, அச்சமற்ற, எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளக் கூடிய, அதேபோன்று, சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற தனித்துவமிக்க தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் இந்நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கான வெற்றிமிக்க கூட்டத் தொடரின் முதலாவது பேரணியை இன்று அனுராதபுர நகரிலிருந்து ஆரம்பிக்கின்றோம்”என்று தெரிவித்தார்.