“தேசிய தலைவர்கள் உங்களின் காலடிக்கு வரும் சந்தர்ப்பம் தான் ஜனாதிபதி தேர்தல்”
தமிழ் பொதுவேட்பாளர் முயற்சியால் தமிழர்களின் சுயாட்சிக்கோரிகையே பலவீனமடையப்போகின்றது எனவும், தமிழ் பொதுவேட்பாளரை களமிறங்கிய தரப்புகள்கூட சஜித்துக்கே வாக்களிப்பார்கள் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு திரட்டி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முடிவெடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எப்போதும் காலம் எடுக்கும்.அவர்கள் கனக்க யோசிக்கும் ஆட்கள். பரவாயில்லை நேரமெடுத்து யோசித்து முடிவெடுங்கள் என அவர்களை விட்டுள்ளோம்.
இதற்கிடையில் ஒரு சிலர் தனித்து சென்று தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கியுள்ளனர். எதற்கு தனி வேட்பாளர் என பொதுவேட்பாளர் தரப்பினரிடம் கேட்டேன். சிலர் விடுவம்பு காரர்கள், அதனால்தான் போட வேண்டியேற்பட்டது என பதிலளித்தனர். ஆனால் நாங்களும் சஜித்துடன்தான் நிற்போம் என அவர்கள் என்னிடம் கூறினர். பெரும் தலைவர்கள்தான் இதனைக் குறிப்பிட்டனர். நான் பெயர் சொல்லவிரும்பவில்லை.
நண்பர் அரியநேத்திரனுக்கு என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்க்கத்தான் போகின்றீர்கள்.இதன்மூலம் தமிழர்களின் சுயாட்சிக் கோரிக்கை பலவீனமடையும். எனவே, இந்த விடயத்தில் தமிழ் மக்கள் பங்காளியாகிவிடக்கூடாது.
தேசிய தலைவர்கள் உங்களின் காலடிக்கு வரும் சந்தர்ப்பம்தான் ஜனாதிபதி தேர்தல்.எனவே, அந்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சஜித் பிரேமதாச என்பவர் இனவாதமற்ற தலைவர்.” என தெரிவித்தார்.