ஆசியாவின் மிகப்பெரிய இயற்கைத் துறைமுகமான திருகோணமலை துறைமுகத்தை வளப்படுத்துவோம்
ஆசியாவின் மிகப்பெரிய துறைமுகமான திருகோணமலை துறைமுகத்தை வெற்றிடமாக வைத்திருந்த தேசிய தவறை சரிசெய்து, இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் துரிதமாக அபிவிருத்தி செய்து தேசிய பொருளாதாரத்துடன் இணைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
திருகோணமலை உவர்மலை விளையாட்டரங்கில் இன்று (31) நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரள மற்றும் திருகோணமலை மாவட்ட ஐ.தே.க அமைப்பாளர் சந்தீப் சமரசிங்க ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சேருவாவில தொகுதி அமைப்பாளர் நளின் குணவர்தன, திருகோணமலை கடவத் ஹதர பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ரீ. பஹர்தீன் ஆகியோர் இதன்போது ஜனாதிபதிக்கு ஆதரவாக இணைந்து கொண்டமையும் விசேட அம்சமாகும்.
நிலாவெளி தொடக்கம் திருகோணமலை வரையிலும் வெருகல் ஆறு தொடக்கம் அறுகம்பே வரையிலும் சுற்றுலா வலயங்களை உருவாக்கி பெருமளவிலான சுற்றுலாப் பயணிகளை திருகோணமலைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, மீன்பிடித் தொழிலின் அபிவிருத்திக்கு மானியங்கள் வழங்கப்படுவதுடன், சிவில் பாதுகாப்புப் படைகளின் பிரச்சினையும் உடனடியாக தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சேருவாவில விகாரையின் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிய அரசாங்கத்தின் கீழ் உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் தெற்குக் கைலாசம் எனப் போற்றப்படும் திருக்கோணேஸ்வரம் கோயிலின் கோபுரத்தை புனரமைக்கும் பொறுப்பையும் தாம் ஏற்பதாக தெரிவித்தார். .
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
இந்த நாட்டின் இளைஞர்களுக்காக எமது நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். அந்த முன்னேற்றம் ஏற்றுமதி பொருளாதாரத்தின் மூலம் மட்டுமே அடைய வேண்டும். அதற்காக விவசாயத்தை நவீனமயமாக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 08 மெட்ரிக் தொன் நெல் விளைச்சலைப் பெற முடியும். இதற்கான உதவிகளை வழங்குவோம்.
மேலும், மீன்பிடி தொழில் வளர்ச்சிக்கு மானியம் வழங்குவோம். இந்த நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 50 இலட்சமாக அதிகரிக்க வேண்டும். அதற்காக நிலாவெளியில் இருந்து திருகோணமலை வரையிலும் வெருகல் ஆறு முதல் அறுகம்பே வரையிலும் சுற்றுலா வலயங்களை உருவாக்கி இந்த பிரதேசத்திற்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க திட்டமிட்டுள்ளோம்.
ஆசியாவிலேயே மிகப் பெரிய இயற்கைத் துறைமுகமாகத் திகழும் திருகோணமலைத் துறைமுகத்தை வெறுமனே வைத்திருக்கும் தேசிய தவறை, நாம் தற்போது சீர்செய்து வருகின்றோம். இதை மேம்படுத்த எந்த அரசாங்கமும் கவனம் செலுத்தவில்லை.
அதனால் தான் இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை அபிவிருத்தி வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கின்றோம். திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்து அந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றோம்.
சாம்பூர் சூரிய சக்தி திட்டத்தையும் நடைமுறைப்படுத்தியுள்ளோம். இந்த மாகாணத்தில் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பெரிய முதலீட்டு வலயத்தை உருவாக்கி புதிய கைத்தொழில்களைக் கொண்டுவர பணியாற்றி வருகிறோம். ஹிங்குரக்கொட விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கும் நாம் பணியாற்றி வருகிறோம்.
திருகோணமலைக்கு வந்தபோது மறைந்த ஆர். சம்பந்தன் அவர்களை எனக்கு ஞாபகம் வருகிறது. திருகோணமலையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று எப்போதும் கூறிவந்தார். நான் அவருக்கு அந்த வாக்குறுதியை வழங்கினேன். அந்த வாக்குறுதியை அனைவரும் ஒன்றாக நிறைவேற்றுவோம்.
அத்துடன் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் செயற்பட்டு வருகின்றோம். செப்டம்பர் 21 ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து இந்தத் வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுப்போம் என்று அனைவரையும் அழைக்கிறேன்.’’ என்றார்.