“அரசு முன்னெடுத்து வரும் திட்டங்களே அநுரவின் தேர்தல் அறிக்கையில் உள்ளன”
அரசாங்கம் செய்துள்ள மற்றும் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களையே தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன என்று ஐக்கிய தேசிய கட்சி கூறியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,
ஜனாதிபதி வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க ஆகியோர் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்த மூன்று தேர்தல் விஞ்ஞாபனங்களையும் ஒப்பிட்டு பார்கையில், எதிர்வரும் 5 வருடங்களில் நாட்டை முன்னேற்றுவதற்கு செய்யவேண்டிய செய்ய முடியுமான வேலைத்திட்டங்களை இயலும் இலங்கை எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் சகலருக்கும் வெற்றி எனும் தொனிப்பொருளில் 5 வருட திட்டம் அடங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தின் வேலைத்திட்டங்கள் அனைத்தையும் தான் செய்வதாகவே சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டிருக்கிறார்.
அதனால் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் தோல்வியடைந்தால் நாடு தோல்வியடைந்து வீழ்ச்சியடையும் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் தோல்வியடைந்தால் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்து யால காட்டுக்கு சென்றுவிடுவார்.
இதேநேரம் அநுரகுமார திஸநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள புதிய வியடயம் தான், பல்கலைக்கழகங்களில் இடம்
பெறும் பகிடிவதைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனை அவர்கள் செய்வார்கள். ஏனெனில், பல்கலைக்கழகங்களில் இடம் பெறும் பகிடிவதைகள் அனைத்தும் மக்கள் விடுதலை முன்னணியே மேற்கொள்கிறது. அதனால் அதனை அவர்களால் நிறுத்த முடியும் என நம்புகிறோம்.
மேலும், அவர்களின் கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் ஏனைய விடயங்கள் பெரும்பாலும் அரசாங்கத்தால் செய்து முடித்துள்ள வேலைத்திட்டங்கள் அல்லது அரசாங்கம் முன்னெடுக்க இருக்கும் வேலைத் திட்டங்களாகும் என தெரிவத்துள்ளார்.