“இராணுவ தளங்களுக்கான போர்க்களம் அல்ல இலங்கை”
இலங்கை இராணுவத் தளங்களுக்கான போர்க்களம் அல்ல என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விசனம் தெரிவித்துள்ளார் .
இந்து சமுத்திரத்தில் இலங்கையின் மூலோபாய நிலை மற்றும் இந்தியா, சீனா
மற்றும் அமெரிக்காவின் போட்டியிடும் நலன்கள் பற்றிய கவலைகளை வெளிப்படுத்திய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், நாட்டின் கூட்டாண்மை முதன்மையாக வணிக ரீதியானது, இராணுவப் பயிற்சிகள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், நிரந்தர இராணுவ இருப்பு அனுமதிக்கப்படவில்லை. இலங்கை தனது இறையாண்மையை பேணுவதுடன் வர்த்தகத்துக்காக திறந்த நிலையில் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
சீன நீர்மூழ்கி கப்பல்கள் தொடர்பான இந்தியாவின் கவலைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, இராணுவ கப்பல்களைக் கையாள்வதற்கு வெளிப்படையான பொறிமுறையை கொண்டுள்ளது.
அனைத்து நாடுகளுக்குமான பொதுப் பாதைக்குரிய சுதந்திரத்தை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கப்பல்களை இலங்கை வரவேற்கிறது என்று சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.