சஜித்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள சுமந்திரன்
“எங்களோடு இணங்குகின்ற விடயங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இல்லையேல் இந்நாடு அழிவு பாதைக்குச் செல்லும் என்பதை எதிர்க்கட்சி தலைவருக்கு ஒரு எச்சரிக்கையாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்.” என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாகாணசபை தேர்தல் திருத்தச்சட்டமூலத்தை கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தியுள்ளமையானது ஜனாதிபதியின் இனவாதச் செயற்பாடாகும் எனவும் அவர் சுட்டிகாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று (03) உரையாற்றிய சுமந்திரன் எம்.பி. இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். ஒன்றையும் அவர் செய்யவில்லை. மாகாணசபை தேர்தல் திருத்தச்சட்டமூலத்தையும் அவர் கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தியுள்ளார். இது எமது மக்கள் மீது வெறுப்பைக் காட்டுகின்ற செயலாகவே உள்ளது.
மேற்படி நடவடிக்கை மூலம் தான் யாரென்பதை ஜனாதிபதி மீண்டும் மக்களுக்கு நிரூபித்திருக்கின்றார்.
வாய்மூலம் வாக்குறுதிகளைக் கொடுப்பதும், அவற்றை நிறைவேற்றுவது போல் காட்டுவதும், இறுதி தருவாயில் கடைசி படி ஏறப்படும் நடவடிக்கையை எடுக்காமல் இருப்பதும் தனது சுவாபம் என்பதை ஜனாதிபதி இந்த தருணத்திலும் காண்பித்துள்ளார்.
தனக்கு வாக்களிக்காமல் இருப்பதற்கான தீர்மானத்தை பிரதான தமிழ்க் கட்சி எடுத்துள்ளதால் தமிழ் மக்களை தண்டிப்பதற்காகவே ஜனாதிபதி இவ்வாறு செய்துள்ளார்.
அரை குறை தீர்வாக இருந்தாலும் கூட இருக்கின்ற மாகாணசபைகளை நடத்தவிடக்கூடாது என்பதற்காக இவ்வாறு மோசமான நடத்தையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறங்கியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதில்லை என இலங்கை தமிழரசுக் கட்சி கடந்த முதலாம் திகதி எடுத்த முடிவு சரியென்பதையே ஜனாதிபதியின் இந்த நடத்தை நிரூபிக்கின்றது.
பிரதான எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவளிக்கின்ற போது அவருக்கும் இதனை ஒரு எச்சரிக்கையாக சொல்லி வைக்க விரும்புகின்றேன். எங்களோடு இணங்குகின்ற விடயங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இல்லையென்று சொன்னால் இந்நாடு அழிவு பாதைக்குள் செல்லும்.
கடந்த முறையும் எமது மக்கள் அவருக்கு பெருவாரியாக வாக்களித்திருந்தனர். இந்த தடவையும் தமிழ் மக்கள் எதிர்க்கட்சி தலைவருக்கு வாக்களிப்பார்கள். எனினும், நாடு பூராகவும் அவர் வெளிப்படையாகக் கூறியிருக்கின்ற விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.