கிழக்கு மாகாணத்தை சிங்களவர்களிடம் கொடுக்க முயற்சி !
‘கிழக்கு மாகாணத்தில் பிரதேசவாதத்தை முன்னிறுத்தி தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராகப் பிரசாரம் செய்கிறார்கள். இவ்வாறு அவர்கள் பேசி கிழக்கு மாகாணத்தை சிங்களவர்களிடம் பறிகொடுக்க முயல்கின்றார்கள். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஈ. பி. ஆர். எல். எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பொது வேட்பாளரின் தேர்தல் பணிமனையில் நேற்று
கிழமை நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக டக்ளஸ் தேவானந்தா, மட்டக்களப்பில் பிள்ளையான், வியாழேந்திரன் போன்றோர் பேசி வருகின்றனர். கிழக்கில் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் இருந்தீர்கள்.
உங்களால் மேய்ச்சல் தரை பிரச்னையை தீர்க்க முடியவில்லை. இப்போதுகூட நீங்கள் அது தொடர்பில் பேசக்கூட விரும்பவில்லை.
குறைந்தபட்சம் கன்னியா வெந்நீரூற்றை காப்பாற்ற முடிந்ததா? கல்முனை பிரதேச சபையை தரமுயர்த்த முடிந்ததா?
இதேபோன்றே வடக்கில் கடற்றொழில் அமைச்சராக இருந்தும் இன்று வரை இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை கட்டுப்படுத்த முடிந்ததா?
எங்களுடைய மீனவர்களுக்கு என்ன செய்தீர்கள்? கடற்றொழில் அமைச்சராக இருந்து எமது மீனவர்களின் பிரச்னையை தீர்க்க முடியவில்லை.
ஆனால், இப்போதும் மீண்டும் ரணில் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று கோருகின்றார்கள்.
இது அவர்களின் சட்டை பையை நிரப்பும் செயல், பிரதேச வாதத்தை முன்னிறுத்தி கிழக்கில் பிரசாரம் செய்கிறார்கள். அவர்களுக்கு வடக்கு – கிழக்கு இணைப்பைபற்றிக்கூட அக்கறை இல்லை.
பறிபோகும் கிழக்கை மீட்க இவர்கள் என்ன செய்தார்கள். தற்போதும் பிரதேசவாதம்
பேசி கிழக்கை பறிகொடுக்க முயல்கின்றனர்.
இதனை கிழக்கு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, இலங்கை யில் வாழும் அத்தனை தமிழ் மக்களும் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்’ என ஈ. பி. ஆர். எல். எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.