உயிருடன் உள்ளாரா ஹம்சா பின்லேடன் ?
அல் – குவைதா அமைப்பின் பயங்கரவாத தலைவரான, மறைந்த ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் உயிருடன் இருப்பதாகவும், அவர் தலைமையில் மேற்கத்திய நாடுகள் மீது பயங்கரவாத தாக்குதல்களை நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2001இல் அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தின் மீது தாக்குதல் நடத்தி, உலகையே அச்சுறுத்தியவர் அல் – குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன்.
இதையடுத்து, அமெரிக்க படையினர் அந்த அமைப்பை 2011இல் வேரோடு அழித்ததுடன், பாகிஸ்தானில் இருந்த ஒசாமா பின்லேடன் மீது அதிரடி தாக்குதல் நடத்தி கொன்றனர்.
இதேபோல், ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடனும், 2019இல் அமெரிக்க விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். எனினும், ஹம்சா பின் லேடன் இறந்ததற்கான எந்த ஆதாரத்தையும் அமெரிக்க அரசு வெளியிடவில்லை.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பாஞ்சிர் மாகாணத்தின் தாரா அப்துல்லா கேல் மாவட்டத்தில் ஹம்சா பின் லேடன் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹம்சா பின் லேடன் தலைமையில், அல் – குவைதா பயங்கரவாத அமைப்பு உயிர்ப்புடன் இயங்கி வருவதாக, ஐரோப்பிய நாடான பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும், ‘மிரர்’ நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.
ஹம்சா பின் லேடனை சுற்றி, துப்பாக்கி ஏந்திய 450 பயங்கரவாதிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர, அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் போல் மேற்கத்திய நாடுகள் மீது தாக்குதல் நடத்த ஹம்சா பின் லேடன் தலைமையிலான பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாகவும், அவரையும், அவரது குடும்பத்தினரையும் தலிபான் அரசு பாதுகாத்து, உதவி புரிந்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது