வெட்கமின்றி கருத்து வெளியிடுவதை ஐக்கிய மக்கள் சக்தி நிறுத்த வேண்டும் !
வெட்கமின்றி கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்தி விட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அர்த்த முள்ள பங்களிப்புக்களை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களிடம் வலியுறுத்துகின்றேன் என இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தனிநபர் வருமான வரி அறவீட்டில் நிவாரணங்களை வழங்குவதற்கு ஏதுவான திருத்தங்களை மேற்கொள்வது குறித்து கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடப்பட்டதாகவும், இருப்பினும் அப்போது உரிய வருமான இலக்குகள் எட்டப்படாததன் காரணமாக அதனைச் செய்வது சாத்தியமாகவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்த வருட நடுப்பகுதியில் எதிர்பார்க்கப்பட்ட வருமான இலக்குகள் உள்ளடங்கலாக பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் அடையப்பட்டிருப்பதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியுடன் இந்த வரி நிவாரணத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கும் பின்னணியில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் தனிநபர் வருமான வரிக்கட்டமைப்புத் திருத்தங்கள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், இதுபற்றி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் வழங்கியிருக்கும் விளக்கத்தில் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பொருளாதார மீட்சிக்கு தாமும் பங்களிப்பு செய்ததாக ஐக்கிய மக்கள் சக்தி தற்போது கூறக்கூடும். ஆனால், அந்தக் காலப்பகுதியின் உண்மை நிலவரத்தை நினைவில் வைத்திருக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர், சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவினர் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடன் பேச்சுகள் நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து ஹர்ஷ டிசில்வா அவரது ‘எக்ஸ்’ தளப்பக்கத்தில் செய்த பதிவு,
சவால்களை எதிர்கொள்வதிலிருந்து விலகிச்செல்லும் அவர்களது போக்கைக் காண்பிக்கின்றது அடுத்ததாக தனிநபர் வருமான வரி அறவீட்டில் நிவாரணங்களை வழங்குவது குறித்து கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் முதல் சர்வதேச நாணய நிதியத்
துடன் பேச்சுகளை முன்னெடுத்து வந்தோம். இருப்பினும் அவ்வேளையில் வருமான இலக்குகள் அடையப்படாததன் காரணமாக அத்தகைய நிவாரணங்களை வழங்குவது சாத்தியமானதாக இருக்கவில்லை. ஆனால், இவ்வருடத்தின் நடுப்பகுதியில் வருமான இலக்குகள் அடையப்பட்டுள்ளன. அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டதால் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றமடைந்துள்ளோம் – என்றார்.