வாழை 2 நிச்சயம் வெளிவரும்
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி திரைக்கு வந்த படம் வாழை. தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளம் பகுதியில் வாழைத்தார் சுமக்கும் தொழிலாளியின் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது.
படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. விழாவில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், கிராமத்து பொதுமக்கள் பங்கேற்றனர்.
விழாவிற்காக கிராம மக்கள் 2 பேருந்துகளில் வரவழைக்கப்பட்டிருந்தனர். விழாவில் மாரி செல்வராஜ் பேசியதாவது:-
வாழை படம் இந்த அளவுக்கு நன்றாக வருவதற்கு காரணம் என் முந்தைய பட தயாரிப்பாளர்கள்தான். நான் படம் பண்ணும் போது அவ்வளவு சுதந்திரம் கொடுத்தார்கள்.
வாழை படத்தை ரெட் ஜெயண்ட் செண்பகமூர்த்தி பார்த்துவிட்டு வசூலாக எப்படி பண்ணும்னு தெரியல. ஆனால் உங்களுக்கு நல்ல பெயரை வாங்கி தரும் என்று சொன்னார். படத்தின் இறுதிக்காட்சியில் பூங்கொடி டீச்சர் (நிகிலாவிமல்) ஏன் வரவில்லை என்று பலரும் கேட்டனர்.
அவரது தேதி அப்போது கிடைக்கவில்லை. கடைசியில் அம்மா மடியில் சிவனானந்தன் படுத்திருப்பான். அம்மாவிற்கு பதில் டீச்சர் மடியில் படுத்திருக்கிற மாதிரிதான் காட்சி இருக்க ஆசைப்பட்டேன். விபத்தின் போது இஸ்லாமிய சகோதரர்கள்தான் காப்பாற்றினார்கள் என்ற உண்மை படத்தின் மூலமாக வெளிவந்துள்ளது.
வாழை படத்தின் 2-ம் பாகத்தை நிச்சயமாக எடுப்பேன். முதல் பாகத்தின் பின்னால் இருக்கும் கதையை சிவனானந்தனை வைத்து எடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.