காசாவிலும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்!
காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களில் நேற்றும் (26) பலர் கொல்லப்பட்டதாக காசா மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது.
தெற்கு நகரான கான் யூனிஸில் உள்ள அல் மத்தாரி குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டின் மீது இடம்பெற்ற ஏவுகணை தாக்குதலில் இரு சிறுவர்கள் உட்பட ஐவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது.
அதேபோன்று கான் யூனிஸின் மேற்காக அல் அமல் பகுதியில் உள்ள பாரிஸ் குடும்பத்திற்குச் சொந்தமான வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய குண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
வடக்கில் ஜபலியா முகாமில் வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் இரு பெண்கள் கொல்லப்பட்டிருப்பதோடு அல் நுஸைரத் அகதி முகாமில் மேலும்
ஒருவர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காசா நகரில் அல் சைத்தூன் பகுதியில் உள்ள பொதுமக்களின் வீடுகளை இஸ்ரேலியப் படை குண்டு வைத்து தகர்த்து வருவதாகவும் அங்கிருப்போர் குறிப்பிட்டுள்ளனர்.
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியபோதும் அது காசாவிலும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஓர் ஆண்டை நெருங்கும் காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 41,500ஐ தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.