பொதுத் தேர்தலுக்கான நிதியை வழங்கினார் ஜனாதிபதி
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபாய் தேவையென தேர்தல் ஆணைக்குழு கோரிய தொகையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விடுவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று (29) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடர்பாக இரண்டு சந்திப்புகள் நேற்று (29) இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெற்றன.
இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “பொதுத் தேர்தல் நவம்பர் 14 நடைபெறும் என்பதுடன், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதித் திகதி அக்டோபர் 4 எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பொதுத் தேர்தலுக்குத் தேவையான மொத்த நிதித் தொகையாக எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாவை விடுவிப்பதற்கான உரிய ஆவணத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார்.
பொதுத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் பாராளுமன்றம் நவம்பர் 21ஆம் திகதி கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் ஆணையாளர் நாயகம், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதி மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டு முதலாவது கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இரண்டாவது கலந்துரையாடலில் மாவட்ட தேர்தல் ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்களுக்கு இடையேயான மற்றுமொரு கூட்டம் நேற்று பிற்பகல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டங்களில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது ” என தெரிவித்துள்ளார்.